தொல்வினைகள் தொலைந்து போக

1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.

திருப்பிரமபுரம்.

இது சீகாழி எனப் பிரசித்தமாய் வழங்கப்படும் தலம். சீர்காழி என்றும் வழங்கப்படுகிறது. விழுப்புரம் – மாயவரம் மார்க்கத்தில் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து அரை மைல் தொலைவில் உள்ளது.

பண்: நட்டபாடை. 1 ஆம் திருமுறை.

திருச்சிற்றம்பலம்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1)

முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (2)

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (3)

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. (4)

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன
அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (5)

மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (6)

சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (7)

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (8)

தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (9)

புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (10)

அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே. (11)

திருச்சிற்றம்பலம்.

சுவாமி பெயர்: பிரமபுரீசுவரர். தோணியப்பர்.
தேவி: திருநிலைநாயகி. பெரியநாயகி.

பதிக வரலாறு

மூவாண்டுக் குழந்தையாம் திருஞான சம்பந்தர் தன்னைக் குளக்கரையில் அமரச்செய்து நீரில் மூழ்கி ஸ்நானம் செய்து பின் ‘அகமருடணம்’ என்ற தருப்பணங்கருதி மீண்டும் நீரில் மூழ்கிய தந்தை சிவபாதவிருதயரைக் காணாது, தந்தையை விட்டுக் கணமும் பிரிந்திரார் என்பதை வெளிப்படைக் காரணமாகக் கொண்டு திருவருள் பெற வேண்டிய செவ்வியுண்டாதலாலே “அம்மே! அப்பா!” என்று கூறி திருத்தோணிபுரச் சிகரத்தை நோக்கிக் கதறி அழ, இறைவன் இறைவியோடு விடையின்மேல் வந்தருளி இறைவியைக் கொண்டு பொன் வள்ளத்தில் பாலைக் கறந்து ஊட்டச்செய்ய, அம்மையும் அப்பாலிலே எண்ணரிய சிவஞானங்குழைத்து ஊட்ட, அதை ஊண்ட அளவிலே திருஞான சம்பந்தர் பரஞானம், அபரஞானம் யாவும் ஓதாதே உணர்ந்தார். பின் நீரினின்றும் வெளிவந்து கரை சேர்ந்த சிவபாதவிருதயர் குழந்தை பால் உண்ட அடையாளங்களைக் கண்டு ஒரு சிறு கோலினை எடுத்து ஓச்சி, “எச்சில் மயங்கிட உனக்குப் பால் கொடுத்தாரைக் காட்டு” என வினவ, தனக்குப் பால் கொடுத்த அம்மையப்பரைத் தன் சிறு விரலால் சுட்டிக்காட்டி அங்க அடையாளங்களுடன், “என்னை இது செய்த பிரான் இவனே” என்று தந்தைக்குக் காட்டுவது போல உலகத்தவர்க்கு இறைவரைக் காட்டியருளிய முதற்றிருப் பதிகம் இது.

பொழிப்புரை

1. தோடு அணிந்த திருச்செவியுடையவனாய் இடப வாகனத்தின் மீது அமர்ந்து ஒப்பற்ற தூய்மையான வெண்ணிறமுடைய சந்திரனைச் சிரத்திலே அணிந்து கொண்டு, சுடுகாட்டுச் சாம்பலைத் தன் மேனி முழுவதும் தரித்துக் கொண்டு, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன், தாமரை மலரிற் தோன்றிய பிரமதேவன் முற்காலத்தில் இறைவனைப் பணிந்து வழிபட்டதனால் அவனுக்கு அருள் செய்த பெருமையுடைய திருப்பிரமபுரம் என்னும் சீகாழிப்பதியில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானாகிய இவனே யாம்.

2. முற்றிய ஆமை ஓடு, இளமையான நாகம், பன்றியின் கூரிய் கொம்பு, ஆகியவைகளை அணிகலன்களாகக் கொண்டு, தசை உலர்ந்து போன பிரம கபாலத்தைத் தனது பலி பாத்திரமாகக் கையிற்றரித்து அதில் பிச்சையேற்று எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன், கற்றலும், கேட்டலுமுடைய பெரியோர்கள் தங்கள் கரங்களால் தன் கழல்களை வணங்கிப் போற்ற விடையின்மேல் ஏறி அருள் செய்த திருப்பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனே யாம்.

3. கங்கைநதி தங்கி நிற்கின்ற நீண்ட சடையின்மேல் ஒப்பற்ற வெண்மையொளி பொருந்திய சந்திரனைச் சிரத்தில் அணிந்து அழகு மிக்கதாக அடுக்கப்பட்ட கைவளையல்கள் கழன்று விழும்படியாக என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன். பதிகள் பல நிறைந்த இப்பார்மீது ஒப்பற்ற பதி இது என்று சொல்லும்படி மிக்க புகழ்பெற்ற இத்திருப்பிரமபுரத்தில் விரும்பியுறைகின்ற பெருமானாகிய இவனே யாம்.

4. ஆகாயத்தில் செருக்குடன் திரிந்த மும்மதில்களையும் எரித்ததுமட்டுமின்றி பிரமனது மண்டையோட்டிலே மன மகிழ்ச்சியுடன் பலியேற்க வந்து எனது சித்தத்தைக் கொள்ளை கொண்ட கள்வன். புற்றுக்குள் வசித்தலை விரும்புகின்ற பாம்பும், கொன்றை மலரும் நிறைந்து வ்இளங்கும் மார்பில் இடப்பாகத்தில் உமாதேவியாரை வைத்து மகிழ்ந்த இத்திருப்பிரமபுரத்தில் விரும்பியுறையும் பெருமானாகிய இவனே யாம்.

5. ஒரு பாகத்தில் பெண்ணையுடையவன். சடைமுடியான். இடபவாகனத்தில் பவனி வருபவன். இவன் என்று யாவராலும் துதிக்கப்பட அதன் மீது அமர்ந்து என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன். கருமை நிறங்கொண்ட கடலால் ஒரு காலத்திலே உலகெல்லாங்கவரப்பெற்ற பொழுது இது ஒரு தோணியாகி மிதந்தது என்னும் பெருமை பெற்ற இத்திருப்பிரமபுரத்திலே விரும்பியுறையும் பெருமானாகிய இவனே யாம்.

6. ஸ்வரங்களோடு கூடிய வேத கீதங்களோடு திருக்கூத்தினையும் உடையவராய் மழுவேந்தி, என் கையிடத்தே கூட்டமாய்ப் பொருந்தியிருக்கின்ற வெள்ளிய ஒளிபடைத்த வளைகள் ஒவ்வொன்றாய்க் கழன்று போமாறு என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டவன். இருள் நிறைந்ததும் மணம் மிகுந்ததுமான பொழில்களிடத்தும், நீண்டு உயர்ந்த சோலைகளிடத்தும் ஒளிக் கிரணங்கள் சிந்துமாறு சந்திரன் தவழ்கின்ற இத்திருப்பிரமபுரத்திலே விரும்பியுறைகின்ற பெருமானாகிய இவனே யாம்.

7. சடையிலே கங்கையுடையவன். கையினில் ஏந்திய தீ உடையவன். அத்தீ வீசி அதனால் அழகு ஏற்பட, உடையிலே கச்சாகப் பொருந்திய பாம்போடு திரிந்து எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன். கடலோடு கலக்கின்ற உப்பங்கழிகள் சூழ்ந்த குளிர்ச்சியுடைய சோலைகளில் அழகிய பொன்னிறம் பொருந்திய சிறகுகளையுடைய அன்னங்கள் தங்கள் பெடைகளைத் தழுவுகின்ற இத்திருப்பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனே யாகும்.

8. திருக்கயிலாய மலையைப் பெயர்த்தெடுக்க வியர்வை மிகுந்த தோள்களால் வீரத்தன்மையைத் தோற்றுவித்த இராவணனுடைய அவ்வாற்றலையழித்து எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன். துன்பங்கள் மிக்க இவ்வுலகில் பல ஊழி வெள்ளங்கள் தோன்றும்போதெல்லாம் ஏனை உலகம் அழியத் தான் அழியாது ஒவ்வொரு பெயருடன் விளங்கப் பெற்ற இத்திருப்பிரமபுரத்தில் விரும்பியுறைகின்ற பெருமானாகிய இவனே யாம்.

9. திருமாலும் பிரமதேவனும் முறையே திருவடியையும் திருமுடியையும் குறிவைத்துக் கொண்டு இறைவனைக் காணுமாறு பேருரு எடுத்துத் தேடியுங் காணாது அவர்கள் தோல்வியுறச் சோதியுருவாய் வெளிப்பட்டு நின்றவனாகிய எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன். ஒளி வீசும் நெற்றியையுடைய பெண்களும் மற்றும் உலகத்தவரும் வணங்க அவர்களைக் காத்தருளுகின்ற இத்திருபிரமபுரத்தில் விரும்பிஉறைகின்ற பெருமானாகிய இவனே யாகும்.

10. புத்தரும் அறிவில்லாச் சமணரும் பழித்துரைக்க வேத நன்னெறியில் நில்லாத உலகத்தவர்கள் அப்பழிக் கூற்றுக்கு ஏற்றவாறு தமக்குத் தோன்றியவற்றை சொல்லவும் பிச்சையேற்று எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன். “இது வியப்பாகிய ஓர் மாயம்” என்னும்படியாக மதம் பொருந்திய யானை வருந்த அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவரும் பித்தர் போன்றவருமான திருப்பிரமபுரத்தில் மேவியிருக்கிற பெருமானாகிய இவனே யாகும்.

11. அரிய நெறிகளை வகுக்கின்ற வேதங்களில் வல்லவனாகிய பிரமனால் இறைவர் பூசையின் பொருட்டு உண்டாக்கப்பட்ட தாமரை மலர்கள் நிறைந்த விசாலமான பிரமதீர்த்தம் என்னும் தடாகத்தினையுடைய முத்தி நெறியௌயுடைய திருப்பிரமபுரம் என்னும் இப்பதியில் மேவிய பெருமானாகிய இவனை ஒருமைப்பட்ட மனத்துடன் உணர்ந்த திருஞானசம்பந்தன் பாடிய சிவநெறி காட்டுகின்ற இத்தமிழ்த்திருப்பதிகம் ஓதவல்லவர்கள் தங்களுடைய பழவினைகளைப் போக்கிக் கொள்ளுதல் எளிய காரியமாகும்.

தொல்வினைகள் தொலைந்து போக
Scroll to top