தரித்திரம் நீங்கித் தனமுடன் வாழ

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.

திருவாவடுதுறை (நாலடி மேல்வைப்பு)

பண்: காந்தார பஞ்சமம். 3 ஆம் திருமுறை.

திருச்சிற்றம்பலம்

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கி வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே [1]

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே [2]

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றப் போதணிந்த
கனலெரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே [3]

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென் நா
கைம்மல்கு வரிசிலைகி கனை ஒன்றினால்
மும்மதில் எரிஎழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே [4]

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே [5]

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே [6]

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென் நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படிஅழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே. [7]

பேரிடர் பெருகியோர் பிணிவரினும்
சீருடைக் கழலலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே [8]

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாதென் நா
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றாமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே. [9]

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன்னடி யலால் அரற்றாதென் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்பட் கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே [10]

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநனை வேற்படை எம்மிறையை
நலமிகு ஞான சம்பந்தன் சொன்ன
விலையுடை அருந் தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே. [11]

திருச்சிற்றம்பலம்

சுவாமி பெயர்: மாசிலாமணியீசர். தேவி: ஒப்பிலாமுலையம்மை (அதுலகுசநாயகி).

பதிக வரலாறு

திருஞானசம்பந்தர் தன் திருக்கூட்டத்தாருடன் திருவாவடுதுறையில் தங்கியிருந்த சமயத்தில் அவருடைய தந்தையாரான சிவபாதவிருதயர் வேள்வி செய்யும் காலம் வந்தது. அவர் அதற்காகப் பொருள் வேண்டினார். அப்போது திருஞானசம்பந்தர் பேரருளை வினவிப் பாடிய செந்தமிழ்ப் பதிகம் இதுவாகும். இப்பதிகம் பாடி முடித்த பின்னர் இறைவனின் இன்னருளால் ஒரு சிவபூதம் தோன்றி பீடத்தின் மீது ஆயிரம் பொன் கொண்ட கிழி ஒன்று வைத்தது. சம்பந்தர் திருவருளைப் பணிந்து சிவபாதவிருதயர் வளர்க்கும் வேள்வி மட்டுமல்லாது அவ்வூரின் வேதியர்கள் யாவருக்கும் இது பயன்படுமெனக் கூறி மகிழ்ந்தார். எடுக்க எடுக்கக் குறையாத கிழி அருளிய இப்பதிகம் இன்றைக்கும் அதற்குரிய பலனைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. விலையுடை அருந்தமிழ் மாலை என திருஞானசம்பந்தர் பெருமானால் திருவாக்கு கொள்ளப்பட்ட பதிகம் இதுவாகும்.

பொழிப்புரை

1. துன்பத்திலும், தளர்ச்சியிலும், பழவினைகளின் தொடர்ச்சியிலும், உன்னுடைய திருப்பாதங்களைத் தொழுது எழுவேன். திருப்பாற்கடலில் அமுதுடன் தோன்றிய விஷத்தினை கண்டத்தில் வைத்த வேதப் பொருளே!
நிதி வேண்டினார்க்கு ஈவதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையேல், நீ எங்களை ஆளும் வகை இது தானா? உன்னுடைய இன்னருள் அதுவோ? ஆவடுதுறை அரனே!

2. வாழ்விலும், சாவிலும், வருத்தங்கள் படும்போதும், வழுக்கி விழுந்த போதும் உன்னுடைய திருத்தாளை நான் விடமாட்டேன். கங்கை தங்குகின்ற தலையிலே பிறைச் சந்திரனை வைத்த புண்ணியனே!
நிதி வேண்டினார்க்கு ஈவதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையேல், நீ எங்களை ஆளும் வகை இது தானா? உன்னுடைய இன்னருள் அதுவோ? ஆவடுதுறை அரனே!

3. கனவு, நினைவு, ஆகிய இருநிலைகளிலும் உன்னை நான் மனத்தாலும் வழிபடுதலை மறக்க மாட்டேன். சுடுகின்றதும், பற்றி எரிகின்றதுமான அனலைத் தாங்கும் திருக்கரங்களையுடையவனே!
நிதி வேண்டினார்க்கு ஈவதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையேல், நீ எங்களை ஆளும் வகை இது தானா? உன்னுடைய இன்னருள் அதுவோ? ஆவடுதுறை அரனே!

4. தும்மல், நோய், மற்றும் கொடிய துயரங்கள் தோன்றினாலும் உன்னுடைய மலர் போன்ற அந்தத் திருவடிகளை அல்லாது வேறு எதையும் என் நாக்கு பேசாது. கையில் பிடித்த வில்லில் பூட்டிய ஒற்றை கணையினால் முப்புரங்களும் எரியும் படி கோபம் கொண்டவனே!
நிதி வேண்டினார்க்கு ஈவதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையேல், நீ எங்களை ஆளும் வகை இது தானா? உன்னுடைய இன்னருள் அதுவோ? ஆவடுதுறை அரனே!

5. கையில் உள்ள பொருள் நழுவிப் போனாலும், தொலைந்து போனாலும் உன்னுடைய செம்மையான திருவடியல்லாது வேறு ஒன்றினை நினைக்க மாட்டேன். கொய்யப்பட்ட அழகிய மணம் வீசும் மலர்கள் விளங்கும் தலையினையும், கருமை பொருந்திய கழுத்தையும் உடையவனே!
நிதி வேண்டினார்க்கு ஈவதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையேல், நீ எங்களை ஆளும் வகை இது தானா? உன்னுடைய இன்னருள் அதுவோ? ஆவடுதுறை அரனே!

6. கொடுமையான துயரங்கள் தோன்றி அதன் காரணமாய அச்சம் கொண்டாலும், என் தந்தையே உன்னுடைய திருவடிப் பெருமையைத் தவிர வேறு ஒன்றினையும் என் நாக்கு புகழ்ந்து பேசாது. ஐந்தலை நாகத்தினை அரையில் கச்சாக அணிந்த வெண்மையான திருநீற்று பொடியை மேனியில் பூசிய சங்கரனே!
நிதி வேண்டினார்க்கு ஈவதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையேல், நீ எங்களை ஆளும் வகை இது தானா? உன்னுடைய இன்னருள் அதுவோ? ஆவடுதுறை அரனே!

7. வெப்பு நோயுடன் கலந்து தீவினைகள் நேர்ந்தாலும் என் அப்பனே! உன் திருவடியைத் தவிர வேறு ஒன்றினையும் என் நாக்கு பேசாது. மன்மதன் உருவம் அழியும்படி அத்தன்மையாக நெருப்பு எழும்படி நெற்றி கண்ணைத் திறந்தவனே!
நிதி வேண்டினார்க்கு ஈவதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையேல், நீ எங்களை ஆளும் வகை இது தானா? உன்னுடைய இன்னருள் அதுவோ? ஆவடுதுறை அரனே!

8. பெருங்கஷ்டங்கள் பெருகி, நோய் வந்தாலும் உன்னுடைய சிறப்பு மிக்க கழல்களைத் தவிர வேறு ஒன்றினைச் சிந்திக்க மாட்டேன். இராவணனை பெருங்கஷ்டம் கொள்ளும்படி கயிலை மலையின் கீழே மிதித்தவனே!
நிதி வேண்டினார்க்கு ஈவதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையேல், நீ எங்களை ஆளும் வகை இது தானா? உன்னுடைய இன்னருள் அதுவோ? ஆவடுதுறை அரனே!

9. உண்ட நிலையிலும், பசித்த நிலையிலும், தூங்கும் போதும், உன்னுடைய ஒளி பொருந்திய மலரடிகளைத் தவிர வேறு ஒன்றினை என் நாக்கு போற்றி பேசாது. திருமாலும் பிரமதேவனும், உன்னை இன்ன தன்மையன் என்று அளக்க ஒன்னாதபடி ஆனவனே!
நிதி வேண்டினார்க்கு ஈவதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையேல், நீ எங்களை ஆளும் வகை இது தானா? உன்னுடைய இன்னருள் அதுவோ? ஆவடுதுறை அரனே!

10. பித்தம் மேலிட்டு அதனால் ஓர் பிணி வந்தாலும், என் தந்தையே, உன்னடி தவிர வேறு ஒன்றினையும் என் நாக்கு பேசாது. புத்தர்களும் சமணர்களும் அல்லாதவற்றை கூற பக்தர்களுக்குப் பேரருள் செய்து பழக்கப்பட்டவனே!
நிதி வேண்டினார்க்கு ஈவதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லையேல், நீ எங்களை ஆளும் வகை இது தானா? உன்னுடைய இன்னருள் அதுவோ? ஆவடுதுறை அரனே!

11. அலைகளோடு கூடிய புனல் உடைய திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கிற இலை போன்ற நுனியுடைய சூலப் படையினை ஏந்திய எமது சிவபிரானே நலம் மிக்க திருஞானசம்பந்தன் பாடிய விலை உடைய அரிய தமிழ்மாலையைக் கற்று ஓதவல்லவர்களின் வினையான எல்லாம் நீங்கிப் போய் விண்ணவர்களுடைய உலகத்தில் நிலைத்து நிற்க முன்னேறி செல்வர். துன்பமிக்க இவ்வுலகத்தில் தங்கியிருக்க மாட்டார்கள்.

தரித்திரம் நீங்கித் தனமுடன் வாழ
Scroll to top