தீராப் பிணிகள் தீர்ந்து போக

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.

திருநீலகண்டத் திருப்பதிகம், கொடிமாடச் செங்குன்றூர்

பண்: வியாழக்குறிஞ்சி. 1 ஆம் திருமுறை.

திருச்சிற்றம்பலம்

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 2

முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 3

விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 4

மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 5

மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 6, 7

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 8

நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 9

சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 10

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே. 11

திருச்சிற்றம்பலம்

பதிக வரலாறு

திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தற்பொழுது திருச்செங்கோடு என வழங்கும் கொடிமாடச் செங்குன்றூர் சென்று இறைவனை வணங்கி அங்கிருந்து புறப்பட்டு குடபுலத்துத் தலங்களைத் தரிசித்து திருநணா என்னும் தலம் இறைஞ்சி மீண்டும் கொடிமாடச் செங்குன்றூர் திரும்பி அங்கு உரையுங் காலத்தில் பனிக்காலம் வந்தணைய குளிர்சுரம் பரவி மக்களை வருந்தியது. திருஞானசம்பந்தருடன் உறையும் பரிசனங்களையும் அந்நாட்டில் அவர்கள் பயின்ற காரணத்தால் அக்குளிர் சுரம் பற்றியது.
அது கண்டு அந்நோய் தீர நமது ஞானசம்பந்தர் “அவ்வினைக்கிவ்வினை” என்றெடுத்து “ஐயர் அமுது செய்தவெவ்விடம் முன் தடுத்தெம்மிடர் நீக்கிய வெற்றியினால் எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது நீலகண்டம்” என்றே பதிகம் பாடியருளினார். அப்பதிகத்தினில் திருநீலகண்டம் என்ற குறிப்பினால் ஆணை நிகழ் அதன் காரணமாக அடியார்க்குமின்றி அந்நாடு முழுவதுமே குளிர்சுரம் நீங்கி நலம் பெற்றது. இன்றும் இத்திருப்பதிகத்தை நாள்தோறும் நியமமாகப் பாராயணம் செய்தால் சுரம் முதலிய கொடிய நோய்கள் பலவும் நீங்கிப் பெறுதல் ஆன்றோர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.

பொழிப்புரை

1. முற் பிறவிகளில் நாம் செய்த வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் நமக்கு இன்பம் துன்பங்களாகிய வினைப்பயன்கள் ஆகின்றன என்று கூறுகின்ற அம்மொழியை மட்டும் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் அவ்வினையின்றும் உய்யும் வழியை நாடாதிருப்பது உங்களுக்குக் குற்றம் அல்லவா? அடியார்களாகிய நாம் கையாற் செய்யப்படும் சிவத்தொண்டுகளைச் செய்து எம்பெருமானின் திருவடிகளை வணங்குவோம், அப்படிச் செய்தால் முற்பிறவிகளில் செய்யப்பட்ட தீவினைகள் வந்து நம்மை தீண்டப்பெறா, இதற்குத் திருநீலகண்டத்தின்மீது ஆணை.
2. சிவார்ப்பணமாக நந்தவனங்கள் அமைத்தும், குளங்கள் பலவற்றை தோண்டியும், மற்றும் எம்பெருமானை அன்பு கனிகின்ற மனத்தால் அம்பினையெய்து மும்மதில்களையும் எரித்த பிரானே என்று இரவு, பகல் ஆகிய இருலகாலந்தும் துதித்து பூக்களைக் கொய்து பெருமானின் மலரடிகளில் சாத்தி அடியவர்களாகிய நாம் வணங்குவோம். அவ்விதம் செய்வதால் தீவினைகள் வந்து தீண்டமாட்டா. இதற்குத் திருநீலகண்டத்தின்மீது ஆணை.
3. சிற்றின்ப நுகர்ச்சிகளும் மற்றும் அது போன்ற எல்லாமும் எம்மை மயக்கித் துன்புறுத்தாவாறு எம்மீது இரக்கம் கொண்டு எம்மை ஆளாகக் கொண்டருளிய விரிந்த சடைப்பெருமானே! இலையைப்போன்ற நுனியுடைய சூலமும், தண்டாயுதமும், மழுவும் ஆகிய படைக்கலங்களை உடையவரே! ஆரவாரம் செய்துகொண்டு வரும் தீவினைகள் எம்மைத் தீண்டமாட்டா. இதற்குத் திருநீலகண்டத்தின்மீது ஆணை.
4. விண்ணுலகத்தை ஆள்கின்ற வித்தியாதரர்களாலும், வேதத்தில் வல்லவர்களாலும் “புண்ணிப் பயனாக அடையப்படும் பெருமான்” என்று இரு காலங்களில் தொழுது வணங்கப்படுகின்ற புண்ணியமூர்த்தியே. இமையாக் கண்கள் மூன்று உடையவரே! உங்களுடைய திருவடிகளை யாம் சரண் அடைந்தோம். ஆகவே வலிமை மிக்க தீவினைகள் எங்களை வந்து தீண்டமாட்டா. இதற்குத் திருநீலகண்டத்தின்மீது ஆணை.
5. வேறோர் ஒப்புமையில்லாத மலைபோன்ற திரண்ட வலிய தோள்களையுடையவரே! தாங்கள் எங்களை ஆளாக்கிக் கொண்டுபின் எங்கள் குறைகளைக் கேளாமல் போவதும் தங்கட்குப் பெருமையாகுமோ? சொல்லப்படுகிற துணைகள் பல உடைய இவ்வுலக வாழ்க்கையை உமது திருவடிகளையே துணையாகக் கொண்டு சரண்டைந்தோம். வருத்தம் உண்டாக்கி தீவிணைகள் எம்மைத் தீண்டப்பெறா. இதற்குத் திருநீலகண்டத்தின் மீது ஆணை.
6,7. மறதியுடைய மனத்தின் தன்மையை மாற்றி எம் உயிரை வற்புறுத்திப் பிறப்பிலியாகிய பெருமானே! உமது அழகிய திருவடிகளில் கீழ்ப் பிழை ஏற்படாத வண்ணம் அப்போதே பறித்த மலர்களைக் கொண்டு வந்து உம்மை வணங்கிப் பணியும் அடியார்கள் நாங்கள். எனவே சிறப்பில்லாத் தன்மையான இத்தீவனைகள் எங்களை வந்து அணுகமாட்டா. இதற்குத் திருநீலகண்டத்தின் மீது ஆணை.
8. உலகப் பொருள்களைக் கழித்து வாழ்க்கையை வெறுத்து உம்முடைய கழல் அணிந்த திருவடிகளுக்கே மனம் உருகி மலர்களைக் கொண்டு வந்து அடியார்களாகிய நாங்கள் உம்மை வணங்குகின்றோம். இராவணனை மிதித்து அடக்கிப் பின் அருள் செய்த பெருமானே! திருவற்ற இவ்விழிந்த தீவினைகள் எம்மை வந்து தீண்டப்பெறா. இதற்குத் திருநீலகண்டத்தின் மீது ஆணை.
9. பிரமதேவனும் திருமாலும் தாமே பெரியோம் என்று ஒருவருக்கொருவர் வாது செய்து அழகுடைய உமது திருமுடியையும் திருவடியையும் தொடர்தற்கு அரியவராகத் திகழ்ந்தவரே! வினைகள் தோற்றுவிக்கும் காரணமாக நாங்கள் பிறக்க நேரிட்டாலும் நேரும். சீற்றம் மிக்க இத்தீவினைகள் எம்மைத் தீண்டமாட்டா. இதற்குத் திருநீலகண்டத்தின் மீது ஆணை.
10. புத்த மதத்தில் வீழ்ந்தும், சமணர்களாயும் உடைகளை விலக்கியும் நல்வினை இல்லாது இம்மை மறுமை ஆகிய இரு போகமும் அவைகளைப் பெறுதற்குரிய நல்ல துணையையும் சில மக்கள் இழந்து விட்டாகள். மணம் வீசுகின்ற கொன்றை மலர்கள் சூடிய சடை முடியையுடையவரே! நாங்கள் உமது திருவடியைத் துதிக்கின்றோம். எனவே நரகத்திற்கேதுவாகிய தீவினைகள் எம்மை வந்து தீண்டப்பெறா. இதற்குத் திருநீலகண்டத்தின் மீது ஆணை.
11. மானிடராய்ப் பிறந்த இப்பிறவியிலேயே வழிபட்டு நமது செல்வனாகிய சிவபிரானின் திருவடிகளையடைதற்கும், அன்றி அளவில்லாத பிறவிகள் உண்டாகுமெனினும் அவைகளிலும் நமது பெருமானையே வணங்கும் பேறு பெறவும், தேவாதி தேவனாகிய நமது பெருமானின் திருவடிகளில் உறுதியுடன் பயிலும் திருஞானசம்பந்தன் பாடிய செம்மை நெறி சேர்க்கும் தமிழ்ப் பாடல்கள் பத்தும் வல்லவர்கல்ள் இன்பம் நிறைந்த தேவலோகத்தில் இந்திரனுடன் சமமாக இருப்பார்கள்.

தீராப் பிணிகள் தீர்ந்து போக
Scroll to top