நாகர்களின் தாயானவள் ஸுரஸா. ஆகாயத்தில் வாயுக்குமாரன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்த மஹரிஷிகளும் கந்தர்வர்களும் ஸுரஸாவிடம், “அனுமன் வாயுதேவனின் குமாரன். அவருக்கு நீ ஒரு தடங்களைச் செய்ய வேண்டும். ஒரு அரக்கியின் உருவத்தை எடுத்துக் கொண்டு மலையைப் போல பிரம்மாண்டமாய், பயங்கரமாய், கோரைப் பற்கள் வெளியே தெரிய கண்கள் சிவந்து கொண்டு, வாயை வெகு விகாரமாகப் பிளந்து கொண்டு அனுமன் முன்னே தோன்ற வேண்டும். அப்போது அனுமன் உன்னை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இது அவருக்கான ஒரு பரீக்ஷை. ஒன்று அவர் ஏதேனும் ஒரு உபாயம் கொண்டு உன்னை வெல்வார் இல்லை கவலை அடைவார்”, எனக் கூறினர்.
இவ்வாறு கூற கேட்ட ஸுரஸா தேவி, சமுத்திரத்தின் மத்தியில் ஒரு பெரிய அரக்கி உருவம் கொண்டு நின்றாள். அவளுடைய உருவம் யாரையும் அச்சுறுத்துவதாக இருந்தது. அவள் அனுமனிடம், “வானர சிரேஷ்டனே, என்னுடைய எஜமானர்களான தேவர்கள் உன்னை எனக்கு ஆகாரமாகக் காண்பித்துள்ளனர். ஆகவே நான் உன்னை எனது உணவாக ஆக்கிக் கொள்ளப் போகிறேன். நீயே எநது வாயில் நுழைந்து விடு”, எனக் கூறினார்.
அனுமன் அவளிடம் கைகூப்பி, “தசரத மஹா சக்ரவர்த்தியின் மகனான ராமன் பிரசித்தி பெற்றவர். அவர் தன் மனைவியான விதேஹ ராஜகுமாரி சீதையுடனும், தன் இளவளான லக்ஷ்மணனுடனும் தண்டகாரண்ய வனத்தில் பிரவேசித்தனர். ராமன் பிறிதொரு காரியத்தில் ஈடுபட்டிருந்த போது அவருடைய ம்அனைவியான சீதையை அரக்கன் ராவணன், அபகரித்துச் சென்று விட்டான். எனவே ராமனின் கட்டளைப்படி சீதை இருக்குமிடத்திற்கு நான் தூதுவனாகச் சென்று கொண்டிருக்கிறேன். ராமனின் நாட்டில் வசிக்கும் நீ அவருக்கு உதவி புரிய வேண்டியவளாயிற்றே. எனவே எனக்குத் தடை ஏற்படுத்தாமல் என்னைப் போக அனுமதிக்க வேண்டும். இதில் உனக்குச் சம்மதமில்லாமல் போனால், சீதைப் பார்த்துவிட்டு, ராமனையும் பார்த்து விட்டு உன் வாயில் நானாக நுழைவேன். இதற்குச் சம்மதிக்க வேண்டும்“. என்று கூறினார்.
இஷ்டப்படி உருவத்தை மாற்றி கொள்ளும் வரம் பெற்றிருந்த ஸுரஸா, “அது முடியாது. என்னைத் தாண்டி யாரும் செல்ல இயலாது. இது நான் பெற்ற வரம்.”, எனக் கூறினாள்.
மேலும், “நீ விரும்பினால் என் வாயில் நுழைந்துவிட்டு முடிந்தால் வெளியே வந்து இஷ்டபடி செல். இந்த வரம் எனக்கு பிரம்மதேவனால் வழங்கப்பட்டது”, எனக் கூறி தன் வாயை அகலமாகத் திறந்து மாருதியின் முன்னே நின்று விட்டாள்.
கோபம் கொண்ட மாருதி அப்படியானால் நான் உள்ளே செல்லுமளவுக்கு உன் வாயை அகலமாகத் திற்ந்து கொள் எனக் கூறி தீடிரென பத்து காத தூரம் நீளம் மற்றும் அகலமாகத் தன் சரீரத்தைப் பெரியதாக்கிக் கொண்டார்.
இது கண்ட ஸுரஸை தன் வாயினை இருபது காத தூரம் பெரியதாகத் திறந்து கொண்டாள். அனுமனும் தன் சரீரத்தை முப்பது காத தூரம் பெரியதாக வளர்த்துக் கொள்ள ஸுரஸை தன் வாயை நாற்பது காத தூரம் திறந்து கொண்டாள். இப்படியே அனுமனும் தன் சரீரத்தை தொண்ணூறு காத தூரம் அளவிற்கும், ஸுரஸை தன் வாயை நூறு காத தூரம் அளவிற்கும் பெரியதாக்கிக் கொண்டனர்.
மதியூகம் நிறைந்த வாயுபுத்திரன் திடீரென தன் சரீரத்தைக் கட்டை விரல் அளவிற்குச் சுருக்கி ஸுரஸையின் வாய்க்குள் புகுந்தார். அடுத்தக் கணமே அவள் வாயிலிருந்து வெளிப்பட்ட மாருதி, “தக்ஷப்பிரஜாபதியின் மகளான ஸுரஸா தேவியே. உன்னுடைய நிபந்தனைப்படியே நான் உன் வாய் உள்ளே புகுந்து வெளி வந்து விட்டேன். உனக்கு எனது நமஸ்காரம். இப்போது நான் சீதை இருக்குமிடம் தேடிச் செல்கிறேன். பிரம்மதேவனிடம் நீ பெற்ற வரமும் உண்மை ஆகிவிட்டது”, எனக் கூறினார்.
ஸுரஸா தேவி தன் சுய உருவத்திற்கு மாறி, “வானர சிரேஷ்டனே! உனது காரியம் வெற்றி பெறும் பொருட்டு சுகமாகச் செல்வாயாக. ராமரோடு சீதையைச் சேர்ப்பாயாக” என வாழ்த்துக் கூறி அனுப்பினாள்.
யாராலும் செய்வதற்கு அரிய செயலை மாருதி அனாயாசமாக முடித்ததைக் கண்ட அனைத்து ஜீவராசிகளும் அனுமனைப் போற்றி பாராட்டின.
Featured image courtesy: Pinterest.