இவ்வாறு ஸுரஸையை வெற்றி கொண்ட அனுமன் ஆகாயத்தில் கருடனைப் போல வேகமாகப் பறந்து கொண்டிருந்தார். சில சமயங்களில் மேகங்கள் இடையே புகுந்து பின்னர் வெளிவருவது சந்திரன் மேகக் கூட்டத்தின் இடையே புகுந்து வெளிவருவதற்குச் சமானமாய் தோன்றியது. இவ்வாறு அனுமன் ஆகாயத்தில் மலையரசனைப் போல பிரம்மாண்டமாய் பறந்து கொண்டிருக்கும் போது ஸிம்ஹிகா என்ற அரக்கி அவரைப் பார்த்து விட்டாள். வயது முதிர்ந்த அந்த அரக்கி மாயசக்தி பெற்றவள், இஷ்டப்படி உருவம் எடுக்கும் சக்தி கொண்டவள். அனுமனைக் கண்ட அவள், “வெகுநாட்கள் பின்னர் இன்று நிறைவான ஆகாரம் ஒன்று கிடைத்துள்லது. இது மிகப் பெரிய பிராணி” என்று எண்ணிக் கொண்டு, அனுமனின் நிழலைப் பற்றி இழுத்தாள்.
திடீரெனத் தன் வேகம் தடைப்படுகிறதே என எண்ணிய ஆஞ்சநேயர் சுற்றெங்கிலும் பார்த்தார். திடீரெனப் பின்னி இழுக்கப்பட்டு தடைப் பட்டிருக்கிறேனே இதன் காரணம் என்ன? என்னுடைய வீரம் மழுங்கி விட்டதே என்று சிந்திக்கலானார். அப்போது கடலில் வீற்றிருக்கும் ஒரு பெரிய உருவத்தைக் கண்டார். வானர ராஜனான சுக்ரீவன், “ஸாயாக்ராஹி” என்ற பூதத்தைப் பற்றி முன்னமே கூறி இருந்தது அவருடைய நினைவுக்கு வந்தது. “அது இது தானோ? நிழலைப் பற்றி இழுக்கக் கூடிய மாயசக்தி படைத்த பூதம் இதுவாகத் தான் இருக்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார்.
வானர சிரேஷ்டன் உடனே தன் சரீரத்தைப் பெருக்கிக் கொண்டு பெரிய உருவமாக வளர்ந்தார். இதைக் கண்ட ஸிம்ஹிகா விடும் தன் வாயைப் பெரியதாகத் திறந்து கொண்டாள். அவளுடைய வாயானது பாதாளக் குகையைப் போல இருந்தது. மாருதி அவள் சரீர அளவு, உயிர் நாடி ஆகியவற்றை நன்கு கண்டு கொண்டு, திடீரென தன் உடலைக் குறுக்கிக் கொண்டு அவள் வாய்க்குள்ளே சென்றார். அவருடைய கூரிய நகங்களால் ஸிம்ஹிகா வின் உயிர்நிலையைக் கீறி மிக்க வேகத்துடன் வெளியே வந்தார். ஸிம்ஹிகா பெரும் சத்தத்தோடு கடலில் விழுந்து மாண்டு போனாள். முன்யோசனை மற்றும் தைரியம் மிகக் கொண்ட அனுமன் சாமர்த்தியத்தோடு அவளை வீழ்த்தி விட்டு முன்போலவே ஆகாசத்தில் பறக்கத் துவங்கினார். ஸிம்ஹிகாவின் முடிவானது அனுமனால் என பிரம்மதேவரால் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
ஆகாயவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பூதங்கள் யாவும், “வானரர்களுள் சிறந்தவனே, இன்று செயற்கரிய திகிலை ஊட்டும் காரியம் ஒன்றினை நீ செய்துள்ளாய். ஒரு பயங்கரப் பிராணி ஒன்று உன்னால் கொல்லப்பட்டிருக்கிறது. நீ விரும்பிய காரியத்தைத் தடையில்லாமல் முடிப்பாயாக” என வாழ்த்தினர். மேலும், “உன்னைப் போல மன உறுதி, புத்திக்கூர்மை, முன்யோசனை, செயல்திறன் ஆகியன உள்ளோர் எந்தக் காரியத்திலும் தாழ்ந்து போக மாட்டான், சிறப்புடன் விளங்குவான்” என்றும் அனுமனை கௌரவித்தார்கள்.
அனுமன் மீண்டும் ஆகாய வெளியில் கருடனைப் போல மேலே பறக்கத் துவங்கினார்.
Featured image credit: Facebook page: Lord Krishna – The essence of universe.