திருநாவுக்கரச நாயனார்.
விடந்தீர்த்த திருப்பதிகம், திங்களூர்
பண்: இந்தளம். | 4 ஆம் திருமுறை. |
திருச்சிற்றம்பலம்
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே [1]
இரண்டு கொலாம் இமையோர் தொழு பாதம்
இரண்டு கொலாம் இலங்கும் குழை பெண் ஆண்
இரண்டு கொலாம் உருவம் சிறு மான் மழு
இரண்டு கொலாம் அவர் எய்தின தாமே. [2]
மூன்று கொலாம் அவர் கண் நுதல் ஆவன
மூன்று கொலாம் சூலத்தின் மொய்யிலை
மூன்று கொலாம் கணை கையது வில் நாண்
மூன்று கொலாம் புரம் எய்தன தாமே. [3]
நாலு கொலாம் அவர் தம் முகமாவன
நாலு கொலாம் சனனம் முதல் தோற்றமும்
நாலு கொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொலாம் மறை பாடின தாமே. [4]
அஞ்சு கொலாம் அவர் ஆடரவின் படம்
அஞ்சு கொலாம் அவர் வெல் புலன் ஆவன
அஞ்சு கொலாம் அவர் காயப்பட்டான் கணை
அஞ்சு கொலாம் அவர் ஆடின தாமே. [5]
ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன
ஆறு கொலாம் அவர்தம் மகனார் முகம்
ஆறு கொலாம் அவர் தார் மிசை வண்டின் கால்
ஆறு கொலாம் சுவை ஆக்கின தாமே. [6]
ஏழு கொலாம் அவர் ஊழி படைத்தன
ஏழு கொலாம் அவர் கண்ட இருங்கடல்
ஏழு கொலாம் ஆளும் உலகங்கள்
ஏழு கொலாம் இசை ஆக்கின தாமே. [7]
எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
எட்டு கொலாம் அவர் சூடும் இன மலர்
எட்டு கொலாம் தோள் இணையாவன
எட்டு கொலாம் திசை ஆக்கின தாமே. [8]
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன
ஒன்பது போல் அவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை
ஒன்பது போல் அவர் பாரிடம் தானே. [9]
பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்
பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன
பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை
பத்து கொலாம் அடியார் செய்கை தானே. [10]
திருச்சிற்றம்பலம்
பதிக வரலாறு
அப்பூதி அடிகளார் என்பவர் அந்தணர் குலத்தில் பிறந்து வேதம் பயின்று இறைவனிடத்தில் நீங்காத பக்தி கொண்டிருந்தார். கல்லோடு கட்டி கடலில் போடப்போட்ட திருநாவுக்கரசர், நமச்சிவாயப் பதிகம் பாடி கரையேறிய அற்புதச் சரித்திரம் கேட்டு அவர்மேல் அளவிலாத பக்தி கொண்டிருந்தார் அப்பூதி அடிகளார். ஆதலால் தம் புத்திரர்களுக்கும் திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். அவரது பக்தி குறித்து அறிந்த திருநாவுக்கரசர் ஒரு தினத்தில் அவரது வீட்டிற்கு வருகை புரிந்தார். உணவு உண்ணும் வேளை நெருங்கவே, அப்பூதி அடிகள் தன் மூத்த மகனை தோட்டத்தில் வாழை இலை அரிந்து வரப் பணித்தார். அவனும் தோட்டத்திற்குச் சென்று வாழை இலையை அரியும் சமயத்தில் பாம்பு ஒன்று அவனைக் கையில் தீண்ட விஷம் தலைக்கேறியது. விரைந்து சென்று தன் தாயிடம் இலையைக் கொடுத்துவிட்டுக் கீழே விழுந்தான். பாம்பின் பற்தடங்களைக் கண்டு பாம்பு தீண்டிய விஷத்தால் மகன் மாண்டு போனான் என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அவன் இறப்புச் செய்தி அறிந்தால் திருநாவுக்கரசர் உணவு உண்ண மாட்டாரே என்று கவலை கொண்டு, அவனது உடலை ஒரு பாயில் சுருட்டி யாரும் காணா வண்ணம் வைத்து நாவுக்கரசருக்கு உணவு படைக்க முற்பட்டனர். உணவு உண்ணும் முன்னே அனைவருக்கும் திருநீரு அளிக்க விரும்பிய நாவுக்கரசர், மூத்த மகன் எங்கே என்று வினவ, “அவன் இப்போது இங்கே உதவான்”, எனக் கூறி சமாளிக்க முற்பட்டார். தம் ஞான வலிமையால் நடந்தவற்றை அறிந்து திருநாவுக்கரசர், “ஒன்று கொலாம்” எனத் தொடங்கும் பதிகத்தைப் பாட, இறந்த சிறுவன் எழுந்து திருநாவுக்கரசரின் பாதங்களில் விழுந்து அருள் பெற்றான். இந்த அரிய பதிகம் விடந்தீர்த்தப் பதிகம் எனப் பெயர் பெற்றது.