பார்ப்பதற்கு விகாரமாக இருந்த லங்காதேவி ராவணனால் பராமரிக்கப்பட்டாள். அனுமன் லங்கைக்குள் பிரவேசிப்பதை லங்காதேவி கண்டுவிட்டாள். உடனே அனுமனின் முன்னே வந்து நின்ற அவள் அனுமனிடம், “ஏ குரங்கே! நீ யார்? எதற்காக இங்கு வந்தாய்? உள்ளதை உள்ளபடி சொல்லிவிடு. இல்லையேல் உன் உடலில் உயிர் இருக்காது. லங்கையை ராவணனின் சேனைகளில் எல்லாப் பக்கத்திலிருந்தும் காத்து வருகின்றன”, என்றாள். அவளுக்கு அனுமான், “நீ என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுகிறேன். அதற்கு முன் உன்னைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன். குரூரமான கண்களைக் கொண்ட நீ யார்? எதற்காக இந்த நகரத்துடைய வாசலில் நிற்கிறாய்?”, எனக் கேட்டார்.
அனுமனின் கேள்விகளைக் கேட்ட லங்காதேவி கோபமடைந்தாள். “நான் ராவணனின் ஏவலாளி. என்னை அவமதித்துவிட்டு இந்து நகரத்தின் உள்ளே செல்ல இயலாது. நீ இங்கேயே இறக்கப்போகிறாய். நான் இந்த லங்கையின் அதிதேவதை. நாலாபுறத்திலிருந்தும் இந்த லங்கையைக் காவல் காத்து வருகிறேன்.”, என பதில் கூறினாள். அதைக் கேட்ட அனுமன், “நான் இந்த லங்கையின் மாடமாளிகைகள், பூங்காக்கள், தோட்டங்கள் முதலானவற்றை சுற்றி பார்க்க வந்தேன்.”, எனக் கூறினார். இதைக் கேட்டு கோபம் கொண்ட லங்காதேவி, “என்னை வெல்லாமல் இந்நகருக்குள் நீ பிரவேசிக்க இயலாது”, எனக் கூறினாள். அனுமன் தான் லங்கையைச் சுற்றி பார்த்துவிட்டு திரும்பிச் சென்றுவிடுவதாகக் கூறினார்.
இதைக் கேட்ட லங்காதேவி பேரிரைச்சலோடு அனுமனை ஓங்கி அறைந்தாள். கடும் கோபம் கொண்ட வாயுபுத்திரன் தன் இடது கை விரல்களை மடக்கி அவளை தன் முஷ்டியினால் அடித்தார். அனுமனின் அடி தாளாத லங்காதேவி வெலவெலத்துப் போய் தரையில் விழுந்தாள். இதைக் கண்டு அவள் ஒரு பெண்ணாயிற்றே என்ற இரக்கம் அனுமனுக்குத் தோன்றியது. கலங்கிப் போயிருந்த லங்காதேவி அனுமனிடம், “வானர ஸ்ரேஷ்டனே. கோபம் கொள்ளாமல் என்னைக் காப்பாற்று. உனது திறனால் நான் வெல்லப்பட்டு விட்டேன். முன்பொரு சமயத்தில் பிரம்மதேவர் என்னிடம், நீ எப்பொழுது ஒரு குரங்கால் வெல்லப்படுகிறாயோ அப்போது லங்கைக்கும் அதில் உள்ள அரக்கர்களுக்கும் ஆபத்து ஏற்படப்போகிறது எனக் கூறினார். உன்னைச் சந்தித்தப் பின்னர், பிரம்மதேவர் கூறிய அக்காலம் வந்து விட்டது என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகையால் ராவணனால் பாதுகாக்கப்படும் இந்த லங்கைக்குள் நுழைந்து நீ என்ன காரியங்கள் செய்ய நினைக்கிறாயோ அவற்றை நிறைவேற்றி கொள். நீ தேவி சீதையைக் கண்டுபிடிப்பதற்காக வந்திருக்கிறாய். உள்ளே நுழைந்து அவளைத் தேடிக் காண்பாயாக”, எனக் கூறினாள்.
இத்துடன் சர்க்கம் மூன்று நிறைவு பெறுகிறது.