மிதிலை ராஜகுமாரி ஜனகராஜாவின் அன்பு மகளான சீதையை துஷ்டனான அரக்கன் ராவணனுக்குத் தெரியாமல் எந்த உபாயத்தில் சந்திப்பது என அனுமன் சிந்திக்கலானார். “சீதையை யாரும் காணாவண்ணம் ரகசியமாகச் சந்திக்க வேண்டும். தூதனாக வந்திருக்கும் எனது பணி பொறுப்பானது. இடம் பொருள் ஏவல் ஆகியவை கெட்டு விட்டால் வெற்றியை நெருங்கி விட்டக் காரியங்கள் கூட கெட்டு விடும். திறமையற்ற தூதன் விஷயத்தில் இப்படி ஆகி விடும். சூரிய உதயத்தினால் இருள் அழிவதைப் போல அவனால் அக்காரியமும் சர்வநாசம் பெற்று விடும். பயனுள்ளது மற்றும் பயனற்றது என காரியங்களைப் பற்றி தெரிந்து வைத்திருத்தல் மட்டும் போதாது. எனக்கு எல்லாம் தெரியும் என எண்ணும் தூதுவர்களால் காரியங்கள் கெடும். முட்டாள்தனம் எதுவும் நேராமல் இருக்க வேண்டுமே. கடலைத் தாண்டி வந்த பிரயாசை வீணாகம் இருக்க என்ன வழி?”, என அனுமன் சிந்திக்கலானார்.
“அரக்கர்களுக்குத் தெரியாமல் எந்த இடத்திலும் இருக்க இயலாது. அரக்கர் உருவம் கொண்டால் கூட அவர்கள் கண்ணில் படாமல் இருக்க முடியாது. இங்கு அவர்களுக்குத் தெரியாமல் காற்று கூட சஞ்சரிக்க இயலாது போல இருக்கிறது. என்னுடைய சுய வடிவமான மிகப் பெரிய குரங்கு வடிவத்தில் இங்கு இருந்தால் நான் நிச்சயம் அழிந்து போவேன். எனது எஜமானரின் காரியமும் கெட்டுப் போகும். எனவே இப்போது நான் இருக்கும் மிகப் பெரிய பரிமாணத்தைச் சுருக்கிக் கொண்டு சிறிய வடிவை ஏற்று இரவில் லங்கைக்குள் செல்வது தான் சுலபமான வழி. ராமரின் காரியமும் கைகூடும்”, என ஆஞ்சநேயர் முடிவு செய்தார். தேவி சீதையைக் காண அவர் மிகுந்த ஆவலோடு இருந்தார்.