இவ்வாறு தனக்கு ஏற்பட்ட மூன்று தடைகளையும் தன் மதியூகத்தால் வெற்றிகரமாகக் கடந்துவிட்ட அனுமன் நூறு யோஜனை தூரத்தைக் கடந்திருந்தார். அப்போது நாலாபுறத்திலும் தன் பார்வையைச் செலுத்தினார் அஞ்சனை மைந்தன். அடுக்கடுக்கான காடுகளைக் கண்டார். அங்கிருந்த தீவையும், மலய பர்வதத்தையும், அதிலிருந்த தோப்புகளையும் கண்டுகொண்டார் அனுமன். சமுத்திரத்தையும், சமுத்திர ராஜனின் மனைவிகள் என அறியப்படுகின்ற நதிகளின் முகங்களான முகத்துவாரங்களையும் நன்கு கண்டார் அனுமன்.
இதன்பின்னால் தன்னுடைய சரீரத்தை ஒருமுறை பார்த்த அனுமன், “இத்தனைப் பெரிய சரீரத்தோடு வேகமாகவும் சென்றால் அரக்கர்கள் என்னைப் பார்த்துப் பரபரப்படைவார்கள்”, என நினைத்துக் கொண்டார். எனவே தன்னுடைய இயல்பான சரீர அளவினை எடுத்துக் கொண்டார் அனுமன். இவ்வாறு அவர் யோசனையோடு தன் சரீர அளவினைச் சுறுக்கிக் கொண்டது, ஒரு ஞானி தன் மாயை நீங்கப் பெற்று ஆத்ம நிலையை எட்டுவதைப் போன்றும், மகாபலிச் சக்ரவர்த்தியினை கர்வபங்கம் செய்ய திரிவிக்கிரம அவதாரம் கொண்ட விஷ்ணுவைப் போலவும் இருந்தது. முன்யோசனையோடு அவர் எடுத்த வடிவம் காலத்தை முன்னோக்கும் ஒரு நோக்கமாகும்.
அனுமன் தன் இயல்பான சரீர அளவோடு லம்ப பர்வதத்தின் சிகரங்கள் ஒன்றினில் இறங்கினார். அவரைக் கண்டு அங்கிருந்த பக்ஷிகளும், மிரிகங்களும் கலக்கம் அடைந்தன. சிகரத்தின் மீதிருந்த அனுமன் ஒரு மலையைப் போலக் காட்சி தந்தார். தானவர்கள், பன்னகர்கள் வாழும் சாகரத்தை, பெரும் அலைகள் கொண்ட நூறு யோஜனை தூரம் கொண்ட கடலை அனுமன் வெற்றியுடன் கடந்து மறுகரையில் நின்றபடி அமராவதி போன்றிருந்த லங்கையைப் பார்க்கலானார்.
அமராவதி – இந்திரலோகத்தில் உள்ள புனிதமான நகரம்.
இத்துடன் சுந்தர காண்டத்தின் முதல் சர்க்கம் நிறைவு பெறுகிறது.