அனுமன் தேவி சீதையைக் காண இலங்கைக்குள் நுழைய ஆவலாய் காத்திருந்த சமயத்தில் சூரியன் அஸ்தமனம் அடைந்தார். இரவு வந்தது. மாருதி தன் வடிவை ஒரு பூனையின் அளவிற்குச் சுருக்கிக் கொண்டார். பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருந்தார். வேகமாகத் தாவிச் சென்று லங்காபுரிக்குள் நுழைந்தார். லங்கையில் வீதிகள் வரிசையாக அழகாக இருந்தன. மாளிகைகள் வரிசையாக, ஏராளமாக இருந்தன. அவற்றின் தூண்கள் சுவர்ணம், வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்தன. ஜன்னல்கள் பொன்மயமாக இருந்தன. கந்தர்வ நகரம் போல லங்கை இருந்தது. ஏழு மற்றும் எட்டு அடுக்குகளாக இருந்த மாடங்களை அனுமன் பார்த்தார். தரையும், சுவர்களும் ஸ்படிகம், தங்கத்தால் அலங்கரிக்கப்படிருந்தன. வைரம், வைடூரியம் போன்ற ரத்தினங்களால் சாளரங்கள் ஜொலித்தன. வீட்டின் தோரண வாயில்கள் தங்கமயமான சித்திர வேலைப்பாடுகளோடு ஜொலித்தன.
சீதையைப் பார்க்க முடியுமா என்ற கவலை ஒருபுறமும், அவரைக் கண்டு விடலாம் என்ற மகிழ்ச்சி ஒருபுறமும் அஞ்சனை மைந்தனுக்கு இருந்தது. தங்கமயமாக இருந்த லங்கை ராவணனுடைய புஜபல பராக்ரமத்தாலும், வீரம் கொண்ட அரக்கர்களாலும் பாதுகாக்கப்பட்டது. அப்போது சந்திரோதயம் நிகழ்ந்தது. சந்திரன் தன் ஆயிரமாயிரம் கிரணங்களால் உலகில் தன் ஒளியைப் பரப்பி வானில் எழுந்தான். சந்திரனின் ஒளி சங்கின் பிரகாசத்தோடு பால், தாமரைத்தண்டு ஆகியவற்றின் வெண்மை நிறத்தைக் கொண்டிருந்தது. பொய்கை ஒன்றில் அன்னம் மிதப்பதைப் போல சந்திரன் வானில் மிதந்து வருவதை வானரவீரன் கண்டார்.
2 வது சர்க்கம் பூர்த்தி அடைந்தது.