அனுமன் நூறு யோஜனை தூரம் கொண்ட சமுத்திரத்தைக் கடந்து திரிகூட மலைச் சிகரங்களில் அமைந்திருக்கும் லங்கையைப் பொறுமையாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவர் மேலே மரங்களில் இருந்து உதிர்ந்த மலர்கள் படிந்திருந்தன. நூறு யோஜனை தூரம் கொண்ட கடலினைக் கடந்து வந்திருந்தாலும் அனுமன் களைப்பு சிறிதும் இன்றி இருந்தார். பல நூறு யோஜனை தூரம் இருந்தாலும் நான் எளிதில் கடந்து விடுவேன். இந்த சமுத்திரம் வெறும் நூறு யோஜனை தூரம் தானே என அனுமன் தனக்குள்ளே எண்ணிக் கொண்டார்.
கருமையான புல் அடர்ந்த தரைகளையும், பூக்களின் நறுமணத்தால் நிறைந்திருந்த வனங்களையும், மரங்கள் அடர்ந்து இருந்த மலைகளையும், பூத்துக் குலுங்கும் மலர்கள் உடைய காடுகளையும் ஊடுறுவிச் சென்றார் வானர சிரேஷ்டன். தேவதாரு, கொங்கு, பேரிச்சை, அரளி, எலுமிச்சை, காட்டுமல்லி, தாழை, பிரியங்கள் போன்ற வகை வகையான மலர்கள், செடி கொடி ஆகியன அனுமனின் கண்களில் பட்டன. தாமரை மற்றும் நீலோத்பலங்களும் பூத்திருந்தன. நடைவழியில் நீர்க்கோழிகளும், அன்னப் பறவைகளும் நிறைந்திருந்தன. வெவ்வேறு பருவங்களில் பூக்கக்கூடிய மலர்களும், காய்கனிகளும் ஒரே சமயத்தில் அங்கிருந்த மரங்களில் இருந்தன.
தேவி ஸீதையை அபகரித்திருந்த காரணத்தாலும், எதிரிகளிடம் இருந்து காவலுக்கு வேண்டியும் ராவணன் லங்கைக்கு விசேஷ பாதுகாப்புகளை ஏற்படுத்தி இருந்தான். மாயா சக்தி மூலம் விரும்பிய உருவங்களை எடுக்கக் கூடிய சக்தி கொண்ட அரக்கர்கள் அங்கே உலவிக் கொண்டிருந்தார்கள். அங்கே இருந்த மதில்சுவர்கள் தங்கமயமாக இருந்தது. வீடுகள் வானளாவ இருந்தன. தெருக்கள் உயரமானதாகவும் வெண்மையாகவும் இருந்தன. கோபுரங்கள் நூற்று கணக்கில் இருந்தன. அரசுச் சின்னம் பொறித்தக் கொடிகள் வரிசையாகப் பறந்து கொண்டிருந்தன. தேவலோக நகரத்தைப் போல இருக்கும் லங்கையை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் அனுமன். ஒரு காலத்தில் குபேரன் வசித்தப் பட்டணம். பொக்கிஷங்கள் நிறைந்த குகையை, கொடிய விஷம் கொண்ட பாம்புகள் காத்துக் கொண்டிருப்பதைப் போல லங்கையை ஏராளமான கொடிய அரக்கர்கள் கூரிய பற்களோடு, சூலம் பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களோடு பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.
நகரத்தின் பாதுகாப்பு அமைப்புகளைக் கண்ட அனுமன், “தற்காப்பு அமைப்புகள் பலமாக இருக்கின்றன, ராவணனும் சாதாரண எதிரி அல்ல. இங்கு தேவர்கள் கூட சுலபமாக யுத்தத்தில் வென்று விட முடியாது”, என நினைத்துக் கொண்டார். “அரக்கர்களின் நகரத்தினுள் இந்த உருவத்தோடு நுழையக் கூடாது. ஸீதையைத் தேடி வந்துள்ள நான் அவர்களை சாமர்த்தியமாக ஏமாற்றியே ஆக வேண்டும். லங்கையில் இரவில் தான் பிரவேசிக்க வேண்டும். சமயத்திற்கேற்றார்போல என் உருவத்தைக் காட்டியும், காட்டாமலும் இருக்க வேண்டும். மிகப் பெரிய பணியைச் செய்ய வேண்டியுள்ளதால் சமய சந்தர்ப்பம் பார்த்து தான் உள்ளே நுழைய வேண்டும்”, எனவும் நினைத்துக் கொண்டார்.