ஸுவேல பர்வதம் எனும் லம்பமலையின் உச்சியில் இருந்தது லங்காபுரி. ஆகாயத்தில் தொங்கும் மேகப்படலைத்தைப் போல பார்ப்பதற்கு இருந்தது லங்கை நகரம். இரவில் லங்காபுரிக்குள் நுழைந்தார் வாயுபுத்திரன். லங்கையில் பல அழகிய வனங்களும், நீர்நிலைகளும், பல தூய வெண்மையான மாளிகைகளையும் கொண்டிருந்தது. சமுத்திரத்தில் இருந்து எழும்பிய குளிர்ச்சிமிக்கக் காற்று நகரில் வீசியது. பலம் கொண்ட ராவணனின் சேனைகளால் பாதுகாக்கப்பட்டு, அழகான தோரணங்களுடன் குபேரனின் அளகாபுரியைப் போலவும், நாகர்களின் தலைநகரான போகவதி போலவும் இருந்தது. மேகங்களால் சூழப்பட்டு, நக்ஷத்திரக் கணங்கள் அதன் மீது ஒளி வீசி நகரை மேம்படுத்திக் கொண்டிருந்தன. கொடிகளில் இருந்த சலங்கை மணிகள் மெல்லிய ஒலி எழுப்பின. அனுமன் இக்காட்சியைக் கண்டு கொண்டே மதில் சுவரை வந்து அடைந்தார். நகரைச் சுற்றி கண்ணோட்டம் பார்த்து வியப்பில் ஆழ்ந்து போனார் அனுமன். வீடுகளில் கதவுகள் தங்கமயமாக இருந்தன. யாகசாலை மேடைகள் வைடூரியம் கொண்டு அமைக்கப் பட்டிருந்தன. ஆங்காங்கே கிரவுஞ்சப் பக்ஷிகளும், மயில்களும் கூவிக் கொண்டிருந்தன. பேரிகை போன்ற வாத்தியங்களில் ஒலி, மக்கள் அணிருந்திருந்த அணிகலன்களின் சலசலப்புகள் என நாற்புறமும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இந்திரனின் வாஸஸ்தல நகருக்கு இணையாக லங்காபுரி இருந்ததை அனுமன் கண்டார். “இந்த நகரை யாரும் பலம் கொண்டு தாக்க இயலாது. அங்கதன், குமுதன், சூரிய புத்திரனான ஸுக்ரீவன், குசபர்வன், கேதுமாலன், ஸுஷேணன், மைந்தன், த்விவி மேலும் என் போன்ற வானரர்கள் சிலரால் மட்டுமே இங்கு வர முடியும்” என அனுமன் சிந்திக்கலானார்.
எனினும் நெடிய தோள்களை உடைய ராமனுடைய பராக்ரமம் மற்றும் லக்ஷமணர் ஆகியோரின் வீரம் குறித்து சிந்தித்து திருப்தி கொண்டார். அப்போது அரக்கி ரூபத்தில் இருந்த லங்கையின் காவல் தேவதையான லங்காதேவி அனுமன் அங்கே நுழைவதைப் பார்த்து விட்டாள். லங்காதேவி ராவணனால் பராமரிக்கப்பட்டவள். பார்க்க மிக விகாரமான முகத்தை உடையவள். அவள் வானர சிரேஷ்டனைப் பார்த்து, “ஏ குரங்கே, நீ யார்? எதற்காக இங்கு வந்தாய். உண்மையைச் சொல்லிவிடு. இல்லையேல் உன் உடலில் உயிர் தங்காது. நீ இந்த லங்கைப்பட்டணத்திற்குள் நுழைய முடியாது. ராவணனின் சேனை இதை எல்லாப் பக்கங்களில் இருந்தும் காத்துக் கொண்டிருக்கிறது”, என்றாள். அப்போது அனுமன், “நீ என்னிடம் கேள்விகள் கேட்டதனால் உண்மையைச் சொல்கிறேன். அதற்குமுன் குரூரமான கண்களுடன் இருக்கிற நீ யார்? எதற்காக நீ நகரத்தின் வாயிலில் இருக்கிறாய்? கொடியவளாக இருக்கும் நீ எதற்காக என்னை மறித்து அதட்டுகிறாய்?”, எனக் கேட்டார்.