திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
திருநெடுங்களம்.
பண்: பழந்தக்கராகம். | 1 ஆம் திருமுறை. |
திருச்சிற்றம்பலம்.
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [1]
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [2]
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [3]
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [4]
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [5]
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தகீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [6]
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [7]
குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [8]
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும்
சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [9]
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே. [10]
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. [11]
திருச்சிற்றம்பலம்.
பதிக வரலாறு
திருப்பாற்றுறை, திருவெறும்பியூர்த் திருமலை முதலிய தளங்களை வணங்கிய திருஞானசம்பந்தப் பெருமான் திருநெடுங்களத்தையடைந்து இறைவனை அன்பால் “நில்பால் நேசம் செலாவததைத் தடுக்கும் இடும்பை தீர்த்தருள்வாய்” என்னுமிப் பதிகத்தைப் பாடியருளினார். ஒவ்வொரு திருப்பாடலிலும் ‘இடர் களையாய்’ என்ற குறிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது. இதுபற்றியே இடர்களையும் திருப்பதிகமாய் பெரியோர்களால் கொள்ளப்பட்டுள்ளது.
பொழிப்புரை
1. வேதங்களையுடையவனே! தோலை உடையாகக் கொண்டவனே! நீண்ட சடையின்மேல் வளர்கின்ற பிறை சந்திரனையுடையவனே. தலைக்கோலமுடையவனே! என்று சொல்லி உனைத் துதித்தாலன்றிக் குறையுடையார்களுடைய குறைகளுக்குக் காரணமான குற்றங்களை ஆராயாத பெருமானே. திருநெடுங்களத்தினை விரும்பிக் கோயில் கொண்டுள்ளவனே. ஒழுக்கத்தினால் உயர்ந்த பெரியோர்களின் இடர்களை நீக்கி அருள்புரிவாயாக.
2. ஆரவாரத்தோடு தோன்றிய வெண்மையான அலைகள் சூழ்ந்த கடலிடையுண்டான நஞ்சினை மிகச்சிறிய அளவாகக் கழுத்தினில் வைத்த பெருமையுடைய தேவனே! உன்னை மனத்தில் நினைத்துப் பாடல்களும் ஆடல்களும் கொண்டு இரவும் பகலும் போற்றுபவர்களின் இடர்களைக் களைந்து அருள்வாயாக. திருநெடுங்களத்தை விரும்பிக் கோவில் கொண்டுள்ள பெருமானே.
3. திருநெடுங்களத்திலே விரும்பிக் கோவில் கொண்டுள்ளவனே! குற்றமற்றவனே! உன்னுடைய திருவடியையே வழிபடுபவனாகிய மார்க்கண்டேயன் உன்னைத் துதிக்க, “இவன் என்னுடைய அடியவன். இவன் உயிரைக் கவரேல்”, என்று அடர்ந்து வந்த கூற்றினை உதைத்த உன்னுடைய பொன்னடிகளையே போற்றி நாள்தோறும் உன்னை வழிபடுவதற்காகப் பூவும் நீரும் சுமக்கின்ற உன் அடியார்களின் இடர்களைக் களைந்து அருள் செய்வாயாக.
4. திருநெடுங்களத்தை விரும்பிக் கோவில் கொண்டவனே. மலையரசனின் மகளாகிய பார்வதி தேவியை ஒரு பாகத்தில் கொண்டு மகிழ்ந்தவனே. அலைகள் வீசும் கங்கை நதியானது தங்குகின்ற சடையையுடைய திருவாரூர்ப் பெருமானே. பிரம கபாலத்தில் பிச்சை ஏற்று மகிழ்வோனே. எல்லோர்க்கும் தலைவனே. நின்னுடைய திருவடி நிழல்கீழ் உறுதியுடன் நிற்பாரது இடர்களைக் களைந்து அருள்புரிவாயாக.
5. திருநெடுங்களத்தை விரும்பிக் கோவில் கொண்டுள்ள பெருமானே! யாவர்க்குந் தலைவனே! அடிமைப் பண்பு மிக்கவர்களும் தெய்வ வழிபாடு செய்பவர்களும், தவக்கோலங்கொண்டவர்களும் ஒன்றின மனதுடன் பாடலோடு உன்னுடைய திருவடியை வணங்கித் தாங்கமுடியாமல் கரை கடந்து பெருகுகின்ற அன்புடன் உன்னுடைய திருவடி நிழலை நீங்காது உன்னை வழிபடுகின்ற பக்தர்களின் துன்பங்களை நீக்கி அருள்புரிவாயாக.
6. திருநெடுங்களத்தினை விரும்பிக் கோவில் கொண்டுள்ளவனே! கிழவனாகி, பாலனாகி, மறைகள் நான்குணர்ந்து அவைகளின் கருத்தாகவும் ஆகிக் கங்கையைச் சடையில் மறைத்தவனே. பரம்பொருளாகிய ஆதிதேவனே. நின் திருவடிகள் இரண்டையும் வழிபடுகின்ற ஆடல் பாடல் உடைய அடியார்களின் இடர்களைக் களைந்து அருள்வாயாக.
7. திருநெடுங்களத்தை விரும்பிக் கோவில் கொண்டுள்ள பிரானே. மாது ஒரு பாகம் உடையவனே. பகைவர்களுடைய புரங்கள் மூன்றையும் திருமால் அக்னி வாயு என்ற மூன்றையுங்க் கூட்டிய ஓர் கொடிய கணையினால் எரித்த பெரியோனே! கொடியின்மேல் எருதினையுடையவனே. எம்பெருமானாகிய நீ அணிந்த திருநீற்றினைப் பூசிக் கொள்ளத்தக்க சந்தனம் இதுவேயென்று கொண்டிருப்பவர்களாகிய அடியார்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக.
8. திருநெடுங்களத்தை விரும்பிக் கோவில் கொண்டுள்ள பிரானே. மலையின் உச்சியின் மேல் விளங்கும் கொடிகளையுடைய மதில்களால் சூழப்பட்ட இலங்கையில் மாறுபட்டு நின்ற அரக்கர்களுக்கரசனாகிய இராவணனை மலையின் கீழ் நசுங்கும்படி மிதித்தவனே! என்று நல்ல வாசகங்களால் துதித்து இரவும் பகலும் வணங்கி நின்று உள்ளம் உருகுபவர்களாகிய அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் செய்வாயாக.
9. திருநெடுங்களத்தினை விரும்பிக் கோவில் கொண்டுள்ள பெருமானே! குவலயாபீடம் என்னும் யானையின் தந்தத்தை முறித்த திருமாலும், பிரமனும் எல்லாவிடங்களிலும் தேடி உன்னைக் காணாது வருந்தும்படி அங்கே ஒரு சோதி வடிவாக நின்றவனே. பன்றியின் வெண்கொம்பணிந்த பெருமானே. எஞ்ஞான்றும் அழிவில்லாத நின் பொன்னடியின் நிழலைப் பற்றாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ற அடியார்களின் இடர்களை நீக்கியருள்புரிவாயாக.
10. திருநெடுங்களத்தை விரும்பிக் கோவில் கொண்டுள்ள பரமனே! கொடுஞ்சொற்களையே தம் வாய்மொழிகளாகக் கொண்டுள்ள தவவேடம் இல்லாத சமணர்களும் நல்ல கொள்கையைத் தமக்கு ஆதாரமாக இல்லாத புத்தர்களும் மெய்ப்பொருள் ஒன்றையுமறியமாட்டார்கள். அழிவில்லாத உண்மையான வாசகங்களால் அமைந்த தோத்திரங்களால் நின் திருவடிகளையே தங்கள் நெஞ்சில் வைத்து வழிபடுகின்ற அடியவர்களின் இடர்களைக் களைந்து அருள் புரிவாயாக.
11. நீண்ட வளர்கின்ற சடையையுடைய சிவபெருமான் விரும்பிக் கோவில் கொண்டுள்ள திருநெடுங்களம் என்னும் தலத்தை அறிவிற் சிறந்தவர்கள் வாழுகின்ற பெரிய வீதிகளையுடை சீகாழி (சீர்காழி) தலைவன் ஞானசம்பந்தன் கூறிய பொருள் சிறப்பால் எல்லோராலும் நாடவல்ல இப்பனுவல் மாலையாகிய இப்பத்துப் பாடல்களையும் பாடவல்லவர்களின் பாவங்கள் தொலைந்து போகும் என்பது உறுதி.