தர்மயுத்தம் முடிந்த பின்னால் விளைந்த நாசத்தால் தர்மர் மன வருத்தம் கொண்டார். தான் ஒருவன் அரியணை ஏறுவதற்காக இத்தனைப் பேர் மாண்டு போயினரே என்று. அப்படிப் பட்ட சமயத்திலே யுதிஷ்டிரன் ஸ்ரீகிருஷ்ணரைக் காண வருகிறார்.
பரமாத்மாவான பார்த்தசாரதியோ அப்பொழுது தவத்தில் இருந்தார். ஆச்சரியப்பட்டுப் போன யுதிஷ்டிரர், “நீயே பரம்பொருள், பரப்பிரம்ஹம், உயிர்கள் அனைத்தும் உன்னைக் குறித்து தவம் செய்கையில், நீ யாரைக் குறித்து தவம் செய்கிறாய்?” என்று வினவுகிறார். (குறிப்பு: யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷ்ணரை விட வயதில் மூத்தவராதலால் ஒருமையில் பேசுவதில் ஆச்சரியமில்லை).
ஸ்ரீகிருஷ்ணர் பதில் உரைக்கிறார், “என்னுடைய மனமானது கங்கையின் மைந்தரான பீஷ்மரிடத்தே உள்ளது, வா அவரிடம் சென்று ஞான உபதேசம் பெறலாம்”.
“ஞான உபதேசம் அளிக்க இறைவனான நீயே உடன் இருக்கும் போது ஏன் பீஷ்மரிடத்தே சென்று கேட்க வேண்டும்?”
“பீஷ்மர் ஞானத்தின் பிறப்பிடம். உலகில் அவரைப் போல ஞானம் பெற்றவர் இல்லை. அவர் பூமியை விட்டுப் பிரியும் பொழுது ஞானமே பூமியை விட்டுப் பிரிகிறது என்று அறிந்துகொள்”.
ஸ்ரீகிருஷ்ணர், யுதிஷ்டிரர், அர்ஜுனாதிகள், பாஞ்சாலி, ஸ்ரீவைஷம்பாயனர் என்று அனைவரும் தர்மக்ஷேத்திரக் களத்தில் கூடுகின்றனர். சரதல்பத்தில் உத்ராயண புண்யகாலத்திற்குக் காத்திருக்கும் பிதாமகர் பீஷ்மரைச் சந்திக்கின்றனர். அப்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தம் யோக நிஷ்டையால் பீஷ்மரின் உடல் ஹிம்சையை அறிந்து கொண்டு புத்துயிர் அளித்து புதிய இரத்தம் பாய்ச்சுகிறார் பீஷ்மருக்கு.
ஸ்ரீ வைஸம்பாயந உவாச:
“ஸ்ருத்வா தர்மா நஸேஷேண பாவநாநி ச ஸர்வஸ:
யுதிஷ்டிர : ஸாந்த நவம் புநரே வாப்ய பாஷத”
ஸ்ரீவைஷம்பாயனர் கூறுகிறார், “தர்மம் குறித்து தான் கற்றறிந்த முறைகள், பாவத்தைப் போக்கும் வழிகள் எவற்றிலும் திருப்தி அடையாத யுதிஷ்டிரன் மீண்டும் ஞானம் பெற வருகை தந்துள்ளான், பீஷ்மர் எனும் நித்யமாய் அன்பு இருக்கும் இடத்தில்”.
பின் யுதிஷ்டிரர் ஆறு கேள்விகள் பீஷ்மரிடம் கேட்கிறார்,
கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்
ஸ்துவந்த : கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்
1. கிமேகம் தைவதம் லோகே?
அகிலத்தில் மிகப் பெரும் தெய்வம் யார்?
2. கிம் வாப்யேகம் பராயணம்?
அனைவருக்கும் அடைக்கலம் யார்?
3. ஸ்துவந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்?
யாரைத் புகழ்பாடுவதன் மூலம் உன்னத நிலையை அடையலாம்?
4. கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்?
யாரைத் துதிப்பதன் மூலம் உன்னத நிலையை அடையலாம்?
5. கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:?
எது மிக உயர்வான தர்மம் என்று தாம் கருதுகிறீர்கள்?
6. கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்?
எவரைக் குறித்து ஜபம் செய்வதால் சம்சாரக் கடலில் இருந்து விடுபடலாம்?
இதற்கு பீஷ்மரின் பதில்கள்:
1. ஜகத்திலே மிகப் பெரியவரான புருஷோத்தமனான அனந்தன் (ஸ்ரீவிஷ்ணு).
2. ஒளி பொருந்திய, அனைவரின் புகலிடமான, சர்வ வல்லமை பொருந்திய உண்மைத் தத்துவமானவர் – ஸ்ரீவிஷ்ணு.
3, 4: தேவர்களுக்கெல்லாம் தெய்வமான பரம்பொருளைத் துதிப்பதன் மூலம்.
5, 6: ஆதியும் அந்தமும் இல்லாத புருஷோத்தமனின் நாமங்களைப் பாடுவதன் மூலம் ஒருவர் சம்சாரக் கடலைத் துறந்து உன்னதமான நிலையை அடையலாம்.
இவ்வாறு பதில் அளித்த பீஷ்மர் ஸ்ரீவிஷ்ணுவின் ஆயிரத்தெட்டு நாமங்களை யுதிஷ்டிரருக்கு உபதேசிக்கிறார்.
விஷ்வம் என்று தொடங்கி சர்வப் ப்ரகரனாயுதன் என்று நிறைவுறும் 1008 நாமங்கள் அவை.
பார்வதி தேவி பரமேஷ்வரனிடம் கேட்கிறார்:
கேநோ பாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோது மிச்சாம் யஹம் ப்ரபோஈஸ்வர உவாச – ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே
அதாவது ஸ்ரீவிஷ்ணுவின் இந்த 1008 திருநாமங்களைக் கூற இயலாதவர்களுக்கு எளிதான வழியைக் கூறுங்கள்.
பரமசிவனார் பதில் உரைக்கிறார்,
“ராம ராம ராம”
இவ்வாறு ராம நாமத்தை ஜபம் செய்வது ஆயிரம் நாமங்களையும் ஜபம் செய்ததற்கு இணையாகும்.
சிறப்பு: இவ்வுபதேசம், பகவானே அருகில் அமர்ந்து கேட்ட சிறப்பு உடையது.