தற்போது பரவலாக நாம் பேசி வரும் ஒரு விஷயம் கொரோனா நோயாளிகள் பலர் asymptomatic ஆக இருக்கிறார்கள் என்பதே.
பொதுவாக கொரோனா பாதித்தவர்களுக்கு மூச்சு தொடர்பான சிரமங்கள், அல்லது தீவிர பாதிப்பு ஏற்படும் என்பது நாம் அறிந்து கொண்டதே. ஆனால் கொரோனா பாதித்தவர்கள் சிலருக்கு தங்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்திருந்தாலும் அவர்களுக்கு அதுகுறித்து எவ்வித அறிகுறிகளும் இல்லாது சாதாரணமாக இருப்பதே பெரிய சிக்கலான விஷயமாக உள்ளது.
பொதுவாக சாதாரண நபர் ஒருவருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவென்பது 95 முதல் 100% வரை இருக்கும். இந்த அளவை Pulse Oximeter மூலம் நம்மால் கண்டுகொள்ள முடியும்.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து போவது Hypoxia எனப்படும். இது பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். Hypoxia ஏற்படும் சமயத்தில் ஒருவர் மூச்சு விடும் வேகம் அதிகரிக்கத் துவங்கும். Gasping என்று சொல்லப்படுகிற மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்படும். இதன் காரணம்: ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதால் அதிகப்படியாக காற்றினை உள்ளிழுத்து அதன் மூலம் ஆக்சிஜன் குறைபாட்டினைச் சமன் செய்ய உடல் எடுக்கும் தன்னிச்சையான (involuntary) செயல்பாடு.
ஆனால், கொரோனா தாக்கிய நோயாளிகளில் பலருக்கு Hypoxia ஏற்பட்டிருந்தாலும் மேலே கூறிய அதிகப்படியான மூச்சு வாங்குதல், மூச்சுத் திணறல், காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் அவர்கள் வெகு சாதாரணமாக இருப்பார்கள். சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் கொரோனா பாசிடிவ் நோயாளியின் SpO2 அளவு 60 என்ற அபாயகரமான அளவிற்குக் குறைந்திருந்த போதும் அவர் வெகு சாதாரணமாகப் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
Hypoxia ஏற்பட்டிருந்தாலும் எவ்வித உடல் பிரச்சினைகளும் வெளிப்படையாகத் தெரியாமல் சாதாரணமாக ஒருவர் இருக்கும் நிலைக்கு Happy Hypoxia அல்லது Silent Hypoxia எனப் பெயர்.