எத்தனை முறை இந்நிகழ்வு குறித்துச் சிந்தித்தாலும் கண்களின் கண்ணீர் பெருக்கெடுக்கும்.
கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், நகர் நீங்கு படலம்.
சுமித்திரை லக்ஷ்மணனுக்கு உரைத்தது,
ஆகாதது அன்றால் உனக்கு அவ் வனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங்குழல் சீதை என்றே
ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – 1841.
பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன் பின் செல்; தம்பி
என்னும்படி அன்று; அடியாரினில் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்
முன்னம் முடி; ‘ என்றனள் பால் முலை சோர நின்றாள் – 1842.
லக்ஷ்மணனைப் பெற்றவள் சுமித்திரை. கைகேயி கேட்ட வரத்தினால் காடு செல்ல தசரதனால் பணிக்கப்பட்ட ராமன் காட்டிற்குச் செல்லத் தயாராக, ராமனோடு கானகம் புறப்பட ஆயத்தமாகி நிற்கும் தன் மகன் லக்ஷ்மணனிடம் சுமித்திரை கூறுகிறாள்,
“அந்த வனம் நீ போகக் கூடாத வனம் அல்ல. அந்த வனம் உனக்கு, இந்த அயோத்தியைப் போன்றதே ஆகும். பெரும் அன்பு பொருந்திய ராமனே நம் மன்னவன். பூக்களை தன் குழலில் சூடிய சீதை. பூமியினை கொடுத்து விட்டு (ஆளும் நாட்டை பரதனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு) இவ்விருவரும் கானகம் செல்கின்றனர். அவர்களோடு நீயும் செல்வாய். இனியும் நீ இங்கிருப்பது குற்றமாகும். மகனே! ராமனின் பின்னால் செல், தம்பியாய் அல்ல. ஒரு அடியாராய் அவனுக்குச் சேவகம் செய்வாய். அவன் திரும்ப இந்நகர் வந்தானெனில் நீயும் வா. ஒருவேளை அவன் இறந்து போவானென்றால் அவனுக்கும் முன்னதாகவே நீ முடிந்து போய் விடு என்றாள்”.
பெற்ற தாயானவள் இப்படிக் கூறிய போது அவளையும் அறியாது அவள் திருமார்பில் பால் சுரந்தது.