அஹிம்சா பரமோ தர்ம:

flower
காதி என்று அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு விஸ்வாமித்திரன் என மகன் ஒருவன் இருந்தார். க்ஷத்திரிய வம்சத்தைச் சார்ந்த அரசனான விஸ்வாமித்திரன் அடிக்கடி கானகத்தில் வேட்டைக்குச் செல்வது உண்டு. ஒருசமயம் வேட்டையின் போது களைப்பு ஏற்படவே, கானகத்தின் அமைந்திருந்த முனிவர் ஒருவரின் ஆசிரமத்திற்கு வந்தார். அந்த ஆசிரமம் வஷிஷ்ட முனிவருடையது. வந்த விஸ்வாமித்திர மன்னனை வரவேற்ற வஷிஷ்டர் அவருக்குத் தேவையான உணவு நீர் யாவையும் கொடுத்து அவரை நல்ல முறையில் உபசரித்தார். வஷிஷ்டரிடம் நந்தினி என்ற காமதேனு ஒன்று இருந்துவந்தது. அப்பசுவை பித்ரு காரியங்களுக்காகவும் அதிதி சத்காரத்திற்காகவும் அதை வைத்திருந்தார், முனிவர் வஷிஷ்டர்.

 

கேட்டதைக் கொடுக்கும் அந்தப் பசுவினைக் கண்ட விஸ்வாமித்திரருக்கு, அப்பசுவின் மீது விருப்பம் உண்டாயிற்று. வஷிஷ்டரிடம் தனக்கு அப்பசுவினைக் கொடுத்து விடும்படியும், அதற்குப் பிரதிபலனாக தன் நாட்டினையும், பத்தாயிரம் பசுக்களையும் தருவதாக விஸ்வாமித்திரர் கேட்டார்.

 

ஆனால் வஷிஷ்டர் அதை அதிதி சத்காரம் மற்றும் பிதுர் காரியங்களுக்காக பயன்படுத்துவதற்காக மட்டுமே வைத்திருப்பதாகவும், விஸ்வாமித்திரர் பொருள் ஈட்டும் ஆசை கொண்டு அப்பசு மேல் ஈடுபாடு கொண்டிருப்பதாலும் தர இயலாது என்றும், உம்முடைய அத்தனைச் சொத்திற்கும் ஈடாகக் கூட குடுக்க இயலாது என்றும் கூறினார்.

 

பிராமணரான நீர் இப்பசுவினைக் கொடுக்க முடியாது என்று கூறினால், க்ஷத்திரியரான நான் என் இயல்பிற்கேற அப்பசுவினை பலவந்தமாக இழுத்துச் செல்வேன் என்று வஷிஷ்டரிடம் கூறினார். எனினும் வஷிஷ்டரோ கோபம் கொள்ளாது, உம்முடைய விருப்பம் அதுவே ஆனால் அதையே நிறைவேற்றி கொள்ளும் எனக் கூறி விட்டார்.

 

விஸ்வாமித்திரர் பலவந்தமாக நந்தினியை இழுத்தும், துன்புறுத்தவும் செய்ய, வஷிஷ்டரை நீங்கி விஸ்வமித்திரரோடு செல்லும் எண்ணம் சிறிதும் இல்லாத நந்தினி வஷிஷ்டரைப் பரிதாபமாகப் பார்க்க, உன்னை யாரேனும் வெற்றி கொள்வார்களேயானால் அவர்களோடு செல், ஆனால் உன்னைக் கைவிடும் எண்ணம் எனக்கில்லை. பிராமணனான என்னால் முடிந்தது இதுதான் எனக் கூற, தன்னைக் கைவிடும் எண்ணம் தன் ஆச்சாரியருக்கு இல்லை என்று அறிந்து கொண்டக் காமதேனு, தன் கொம்பு, சாணம், மூத்ரம், மடி, குளம்பிளிருந்து லக்ஷம் லக்ஷமாக ராக்ஷசர்கள், யவணர்கள், கந்தர்வர்களை உற்பத்தி செய்து விஸ்வாமித்திரரின் மொத்தப் படையையும் நிர்மூலமாக்கி நாலாபுறமும் சிதறடித்தது.
பெருத்த அவமானம் அடைந்த விஸ்வாமித்திரர் தன் ஆற்றல் மொத்தத்தையும் பிரயோகித்து அஸ்திரங்களை வஷிஷ்டரின் மீது ஏவத்துவங்க, கலங்காத வஷிஷ்டர் பிரம்மதண்டத்தை தன் ஆசிரம வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று விட பிரம்மதண்டம் விஸ்வாமித்திரரின் மொத்த அஸ்திர சஸ்திரங்களை ஈர்த்து அவரை நிர்கதியாக்கியது.

 

பெரிதும் அவமானப்பட்ட விஸ்வாமித்திரர் க்ஷத்திரிய பலத்தின் முன்னே பிராமணத்துவம் பெரிதும் உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டவராய் அங்கிருந்து அகன்று பிராமணத்துவத்தைப் பெற தவம் முதலியானவற்றை துவங்கினார். எனினும் அவரது மனதிற்கும் வஞ்சனை எண்ணம் அக்னியாய் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

 

வியாசம் வஷிஷ்ட நஃப்தாரம் சக்தே பௌத்ர மகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோ நிதிம்
வஷிஷ்டருக்கு சக்தி என்ற மகன் பிறந்தார். ஏனைய மகன்களும் பிறந்தனர்.

 

கல்மாதபாஷன் எனும் அரசன் ஒருவன் தன் நாட்டினை புகழ்பட ஆண்டு வந்தான். இஷ்வாகு குலத்தைச் சார்ந்தவன் இவன். இம்மன்னன் ஒருமுறை வேட்டையாடிவிட்டு வரும் சமயத்தில் எதிரே தபஸ்வி சக்தியும் வந்தார். உத்தம பிராமணரின் முன்னே அரசனானாலும் விலகி வழிவிடுவது தர்மம், ஆகவே ஒதுங்கி தனக்கு வழிவிடுமாறு சக்தி கல்மாஷபாதனிடம் கேட்க, கல்மாஷபாதனோ தான் ஏகாதிபதி, அதனால் சக்தி தனக்கு வழிவிட வேண்டும் என்று கூற, இருவருக்கும் இடையில் விவாதம் முற்றியது. கல்மாஷபாதன் ராக்ஷசனைப் போல மூர்க்கமாக நடந்து கொண்டான். சக்தியைக் காயப்படுத்தினான். இதனால் பெரிதும் கோபம் கொண்ட சக்தி, கல்மாஷபாதனை ராக்ஷசனைப் போல மனிதர்களின் மாமிசத்தை உண்டு கெடுவாய் என சபித்தார். தன் ஞானசக்தி மூலம் இதை அறிந்து கொண்ட விஸ்வாமித்திரர், கல்மாஷபாதனை சக்திக்கும், வஷிஷ்டரின் ஏனைய புதல்வர்களுக்கும் எதிராகத் தூண்டினார். சாபம்பெற்ற கல்மாஷபாதன், சக்தி மற்றும் ஏனைய வஷிஷ்ட புதல்வர்களைத் கொன்று தின்று விட்டான்.

 

புத்திர சோகம் கொண்ட வஷிஷ்டர் அத்தனைத் துன்பத்திலும் நிதானம் இழக்காமல், விஸ்வாமித்திரருக்கோ, கல்மாஷபாதனுக்கோ சாபம் அளிக்காமல் தன்னுயிரை விட்டுவிட முயன்றார். ஆனால் தர்மநெறியில் வாழ்ந்த அவரது தற்கொலை முயற்சிகள் யாவும் பலனளிக்கவில்லை. மீண்டும் அவருடைய ஆஸ்ரமத்திற்குத் திரும்பி வரும் வழியில் ஒரு பெண் அவரைப் பின் தொடர்ந்தார். “நீ யார்? ஏன் என்னைப் பின் தொடர்கிறாய்?”, என வஷிஷ்டர் அவரிடம் கேட்க, நான் உங்களுடைய புதல்வன் சக்தியின் பத்தினி என அவள் கூற, அவளைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே யாரும் வேதமோதாத சமயத்திலும் வேத கோஷம் கேட்க, அப்பெண்ணிடம், உன் வயிற்றிலிருந்து வேத சப்தம் கேட்கிறதே எவ்வாறு எனக் கேட்க, அவள் பதில் கூறினாள், உம் புதல்வர் சக்தியின் புத்திரன் என் கர்பத்தில் வசிக்கிறார். 12 வருடங்களாக என் கர்பத்தில் அம்முனிவர் இருக்கிறார் எனக் கூற, மகிழ்ந்தார் வஷிஷ்டர்.

 

இனி தம் குலம் தழைக்கும் என்று மகிழ்ந்த அவ்வேளையில் சாபம் பெற்ற கல்மாஷபாதன் அங்கே வந்து கொக்கரிக்க, சக்தியின் பத்தினி பயம் கொண்டு வஷிஷ்டரை வேண்டினாள். இந்த ராக்ஷஷனால் நம் உயிருக்கு ஆபத்து, நீர் தான் நம்மை ரக்ஷிக்க வேண்டும் என்று கேட்க, வஷிஷ்டர் பதில் கூறினார்: மகளே கலங்காதே! இவன் ராக்ஷஷனல்லன், இவன் மக்கள் போற்றும் அரசன். இவன் பெயர் கல்மாஷபாதன். சக்தியின் சாபத்தால் இவன் ராக்ஷஷனானான், என்று கூறிவிட்டு, கல்மாஷபாதனுக்கு சாப விமோக்ஷணம் அளித்தார்.

 

பின்னர் கல்மாஷபாதனுக்கு அனுகிரகம் செய்து அவனுடைய நாடு சென்று வாழ்த்தினார்.
சக்தியின் பத்தினி தன் பிள்ளையைப் பெற்றெடுத்தார். அவரே பராசர மஹரிஷி.
இவ்வாறு விஸ்வாமித்திரரை வெற்றி கொண்ட வஷிஷ்டர் மன்னிக்கும் குணமும், தயையும் எத்தனைச் சிறப்பு வாய்ந்தது என்று உலகிற்கு உணர்த்தினார்.
அஹிம்சா பரமோ தர்ம:
Scroll to top