ஸமுத்திர ராஜனால் தூண்டப்பட்ட மைனாகப் பர்வத சிரேஷ்டன் இவ்வாறு அன்பு கொண்டு கூறிய வார்த்தைகளால் மகிழ்ந்த வானரோத்தமன் மலைத்தேவனிடம், “பர்வதராஜனே, நீர் இப்படிச் சொன்னதாலேயே நான் மிகவும் சந்தோஷமடைந்தேன். உம்மை தரிசனம் செய்ததே எனக்குப் போதுமானது. எனக்கு நீர் விருந்தோம்பல் செய்து விட்டீர். நான் மேற்கொண்ட காரியம் அவசரமானது. பகல் பொழுதும் சாய்ந்து கொண்டிருக்கிறது. லங்கைக்குச் செல்லும் வழியில் எங்கும் தங்கக் கூடாது என நான் தீர்மானம் ஏற்றிருக்கிறேன். ஆகையால் நான் தங்களது சிகரத்தில் தங்கிச் செல்லாதமைக்கு மன்னிக்க வேண்டும்.”, என்று கூறி அன்போடு தன்னுடைய கையினால் அம்மலையைத் தொட்டு புன்முறுவல் பூத்து, மனம் மகிழ்ந்து ஆகாச மார்க்கத்தில் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
அனுமனின் இச்செய்கையினால் மனம் மிகவும் மகிழ்ந்த ஸமுத்திர ராஜனும், மைனாகப் பர்வத சிரேஷ்டனும் வாயுப்புத்திரரான அனுமனை ஆசீர்வதித்தார்கள். பெருமதிப்போது ஆஞ்சநேயர் ஆகாசத்தில் செல்வதைப் பார்த்துப் போற்றினர். அனுமனின் செய்கையைக் கண்ட தேவர்களும், சித்தர் கணங்களும், மஹரிஷிகளும், ஹனுமனின் எடுத்தக் காரியத்தை முடிக்க அவர் கொண்டுள்ள உறுதியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சிக் கொண்டனர்.
மைனாகனின் செயலினைக் கண்ட தேவேந்திரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். “தங்கமயமான சிகரங்களைக் கொண்ட மைனாக சிரேஷ்டனே, நான் உன்னிடத்தில் மிகவும் மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். இனிமேல் நீ என்னிடம் பயம் கொள்ளத் தேவை இல்லை. உன்னுடைய இஷ்டம் போல் நீ எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள். பராக்ரமசாலியான அனுமன், தசரத புத்திரனான ராமனுக்கல்லவா தூதுவனாகச் சென்று கொண்டிருக்கிறான். நீ அவருக்கு மகத்தான உபச்சாரம் செய்ததால் நான் உன்னிடத்தில் மிகவும் மகிழ்ந்திருக்கிறேன்.”, என்று கூறினான். தேவேந்திரன் இவ்வாறு கூற கேட்ட மைனாகன் மிகவும் மகிழ்ந்து அங்கேயே தங்கி நிலைப்பெற்றது.
Featured image credit: facebook.com