இராமன் வாலியை மறைந்திருந்து அம்பால் அடித்ததும், வாலி தன்னை அடித்த அம்பினைப் பார்க்கிறான். அதில் ராம் என்ற பெயரைப் பார்த்ததும் சற்றே அமைதி கொள்கிறான்.
இதைக் கம்பர் அழகாகக் கூறுகிறார்,
மும்மை சால் உலகுக்கு எல்லாம்
மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்
பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை, ‘இராமன்’ என்னும்
செம்மை சேர் நாமம்தன்னைக்
கண்களின் தெரியக் கண்டான்
வானுலகம் மண்ணுலகம் பாதாள உலகம் எனும் மூவுலகங்களுக்கும் ஆதாரமான மூல மந்திரத்தை, முழுவதுமாகத் தன்னையே வழிபடும் அடியார்களுக்கு ஒப்பற்ற பேற்றினை வழங்கும், இந்தப் பிறப்பிலேயே ஏழுவகை நோய்களாகிய பிறப்பினை அறுக்கும் இராமன் எனும் நாமத்தை அம்பில் கண்டான்.
என்று இராம நாமத்தின் மகிமையையும், வாலி இராம நாமத்தைக் கண்டதையும் விளக்குகிறார்.
இலக்ஷ்மணன் பின் தொடர்ந்து வர இராமன் வாலியை நோக்கி வருகிறான்.
அவனைப் பார்த்து வாலி பின்வருமாறு கூறுகிறான்,
தாங்கள் இஷ்வாகு குல அரசன், தர்மம் சாஸ்திரம் அனைத்தையும் அறிந்தவர் ஆனால் யுத்த நெறிகளுக்குப் புறம்பாக, மறைந்திருந்து நான் வேறு ஒருவனோடு போர் புரியும் பொழுது என்னை அடித்தது தகுமோ? இது தான் மனு கற்று கொடுத்த தர்மமா சாத்திரமா? நான் உன்னை அறிவு கூர்மை உடையவன் என்று நினைத்தேன் ஆனால் நீ இப்படி செய்து விட்டாயே! ஒரு வேளை சீதையைப் பிரிந்த துக்கத்தில் என்ன செய்கிறோம் என்பதனை அறியாது செய்துவிட்டாயா? சீதையை காப்பற்ற வேண்டுமெனில் நீ என்னுடன் நட்பு கொண்டிருக்க வேண்டும், நான் கூறினால் உடனே இராவணன் சீதையை உன்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்திருப்பான்! அதை விடுத்து என்னிடமே அடி வாங்கும் சுக்ரீவனோடு தோழமை கொண்டாடுகிறாயே இது தான் அரசதந்திரமா என்று கேட்டான்! தசரதன் பொய் பேசாதவனாயிற்றே அவன் மகன் நீயா இப்படி செய்தாய்! பரதனின் அண்ணன் இராமனா இப்படி செய்தாய்!
இப்போது புரிகிறது இராமா சீதையைப் பிரிந்த துக்கத்தில் என்ன செய்கிறாய் என்று புரியாமல் செய்து விட்டாய் என்று கூறி கேள்விகளைத் தொடுக்கிறான் வாலி!
உங்களது நாடு வேறு எங்களது நாடு வேறு, நான் உங்களுக்கோ உங்கள் நாட்டவருக்கோ எந்தக் கெடுதலும் செய்யவில்லை, உங்களுக்கும் எனக்கும் நிலத் தகராறா சொத்துத் தகராறா? பின்னர் ஏன் என்னை அடித்தாய்?
நீ நாட்டில் வாழ்பவன் நான் காட்டில் வாழ்பவன், நீ அன்னத்தை உண்பவன் நான் காட்டில் கிடைப்பவற்றை உண்பவன் அப்படி இருக்கும்பொழுது என்னை ஏன் கொன்றாய்?
நீ ஏன் என்னை மறைந்திருந்து அடித்தாய்?
ஒருவேளை நான் மிருகம் என்று என்னை வேட்டையாடினால் வானரமாகிய என்னை ஏன் வேட்டையாடினாய்? புலி, யானை, மான் என்று அதன் தோல் நகம் முடிக்காக வேட்டையாடுவர், ஆனால் குரங்காகிய என்னை ஏன் வேட்டையாடினாய்?
நான் தவறு செய்தேன் என்று நீ தண்டித்தாயானால், நான் செய்த தவறென்ன? பசுவைக் கொல்லவில்லை, அந்தணரை வதைக்கவில்லை, ஸ்த்ரீகளை துன்புறுத்தவில்லை பின்னர் ஏன் தண்டித்தாய்?
பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தான் இராமன், பின் பதில் கூற ஆரம்பித்தான்:
உனக்கும் எனக்கும் நிலத் தகராறு இல்லை உன் நாடு வேறு என் நாடு வேறு என்று கூறினாயே வாலி, நீ நினைத்தது கிஷ்கிந்தை உன் நாடு என்று, இல்லை எங்கள் இராஜ்ஜியம் தெற்கு வரை பரவி இருக்கிறது பரதன் நாடாள்கிறான் நான் காடாள்கிறேன், நீ எனது பிரஜை. இந்தக் காடு, நாடு அனைத்தும் இஷ்வாகு சொத்து. நீ இதை உனது என்று சொந்தம் கொண்டாடுகிறாய், ஆக நிலத் தகராறு உண்டு.
நீ என் பிரஜை ஆக நான் உன்னை தண்டிக்க வேண்டுமென்றால் முன் பின் தெரிந்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
என்னை ஏன் வேட்டையாடுவதற்கு வந்தாய் என்று கேட்டாயே, நீ ஒரு மிருகம் நான் உனக்கு தண்டனை கொடுக்க வந்தேன். உன் தோலுக்காகவோ, நகத்திற்காகவோ, மாமிசத்திற்காகவோ அல்ல.
நீ ஒரு மிருகமாதலால் உன்னை மறைந்திருந்து அடித்ததில் தர்ம மீறல் இல்லை. ஒரு மிருகத்தை வேட்டையாடும்பொழுது மறைந்திருந்து தான் அடிப்பரே அன்றி முன்னால் போய் நின்று தான் அடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேலும் நீ உனது சக்தியின் மேல் முழு நம்பிக்கை கொள்ளாது, காஞ்சன மாலையின் துணையோடு எதிரியின் பாதி பலத்தையும் அபகரித்துக் கொள்கிறாய், இது தர்ம வழி அல்ல. தர்மத்தின்படி நடக்காத நீ எதிரியிடம் தர்மத்தை எதிர் பார்க்கலாகாது.
தண்டனை கொடுப்பதற்கு என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டாயே வாலி, ஆம் நீ தவறுகள் செய்துள்ளாய். சரணம் என்று உன்னிடம் பணிந்து நாட்டை ஒப்படைத்த சுக்ரீவனை ஓட ஓட அடித்தாய், இது மாபெறும் குற்றம். சரணமென்று பணிந்தார்க்கு அபயம் அளிக்க வேண்டியது அரசனின் கடமை, நீ அதிலிருந்து தவறி பெரும் தவறிழைத்தாய். அதற்காகவே தண்டனை.
மேலும் சுக்ரீவனின் மனைவியான ருமையைக் கவர்ந்து சென்றாயே அது பெரிய குற்றம். நீ மிருகம் அதனால் ஒரு மனைவியோடு வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று கூறலாம். ஆனால் உன் தம்பி மனைவியானவள் உனக்கு மருமகள் போன்றவள், அவளை நீ, சுக்ரீவன் உயிரோடு இருக்கும் பொழுது அபகரித்தது பெரும் தவறு. எவன் ஒருவன் மகள், உடன் பிறந்தானின் மனைவி, உடன் பிறந்தவளை அபகரிக்கின்றானோ அவனை விசாரணையின்றி கொல்லலாம் என்று மனு சாத்திரம் கூறுகிறது. ஆக உனக்குக் கொடுத்த தண்டனையில் தவறே இல்லை!
அரசனான நான் தவறு செய்தவனை தண்டிக்க வேண்டும், இல்லையேல் அது பெரிய அதர்மம். நான் எனது தர்மத்தைச் செய்தேன்.
நானும் மனைவியைப் பிரிந்து இருக்கின்றனன், சுக்ரீவனும் மனைவியைப் பிரிந்தவன். ஆகவே அவனுடன் இணைந்தோம், நீயும் இராவணனும் மாற்றான் மனைவியைக் கவர்ந்தோர், ஆக உன்னிடம் நான் நட்பு கொள்ளுதல் தவறாகும்.
என்று சமாதானம் கூறினார்.
இவை அனைத்தையும் கேட்ட வாலி, தன் தவற்றை ஒப்புக் கொண்டான், இராமனிடம் விடைபெற்று விண்ணுலகத்தை அடைந்தான்.