மாருதி ஆகாய மார்க்கமாக தன் பயணத்தைத் தொடங்குதல்.

மாருதி தன் உடல் ரோமங்களைச் சிலிர்த்துக் கொண்டார். நீரைக் கொண்ட கரிய மேகம் போல கர்ஜித்தார். அடிமுதல் நுனிவரை முடிகளைக் கொண்ட தன் வாலினை சுழற்றி உதறினார். நீண்டு பெரியதாய் இருந்த அவருடைய வாலானது பெரிய சர்ப்பம் போல இருந்தது. வெகுதூரம் வரையில் தான் செல்ல வேண்டிய இடத்தினை நிமிர்ந்து உற்று பார்த்து தன் இதயத்தில் பிராணவாயுவை நிறுத்திக் கொண்டார். பின்னர் ஆகாசத்தில் தாவும் முன்னர் வானர வீரர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறலானார், “வாயு வேகமுள்ள ராமபாணம் எப்படித் தடையில்லாமல் போகுமோ அவ்வண்ணம் நானும் ராவணனால் ஆளப்படும் லங்கைக்குச் செல்வேன். அங்கே தேவி சீதையைக் காண்பேன். ஒருவேளை அங்கு அவரைக் காணாவிட்டால், அதே வேகத்தோடு தேவலோகத்திற்குச் சென்று அங்கு அவரைத் தேடுவேன். அங்கும் அவரைக் காணாவிட்டால் கொஞ்சமும் சிரமம் இல்லாமல் ராக்ஷச ராஜனான ராவணனைப் பிடித்துக் கட்டி இங்கே கொண்டு வருவேன். உத்தேசித்த இந்தக் காரியத்தை எப்படியேனும் முடித்துக் கொண்டு இங்கே வருவேன். இல்லையேல் ராவணனுடன் லங்கையும் கட்டி, பெயர்த்து எடுத்துக் கொண்டு இங்கே வருவேன்”, என்று அவர்களுக்கு தைரியம் தருவிக்கின்ற வார்த்தைகளைக் கூறி, அதிவேகமாக ஆகாசத்தில் கிளம்பினார்.

அப்போது அவ்வேகத்தால் ஆஞ்சநேயருடன் அம்மகேந்திரப் பர்வதத்திலுள்ள மரங்களும், புஷ்பங்களும் இலைகளும் நாலாபுறத்திலிருந்தும் கிளம்பின. ஒரு பெரும் மலையைப் போன்ற மாருதி மரங்கள், இலைகள், கொடிகள் ஆகியன சூழப்பட்டு வெகு ஆச்சரியமாகத் தோன்றினார். இப்படி அவரின் வேகத்தால் எழுந்த பெரிய மரங்கள், புஷ்பங்கள், செடிகள் யாவும் வேகம் குறைந்து கடலில் விழுந்தன. இக்காட்சி, நெருங்கிய உறவினரை வழியனுப்ப சிறிது தூரம் வரை அவர்களைச் சென்று வழியனுப்பிவிட்டு சோகமாக வீடு திரும்பும் உறவினர்களைப் போல இருந்தது. அவர் சமுத்திரத்தின் மேல் பறக்கும் சமயத்தில் அவருடைய தொடைப்பகுதியில் இருந்து எழுந்த காற்றின் வேகத்தால் சமுத்திர நீர் கலங்கு சுழன்று நுரையோடு காணப்பட்டது. அவரின் வேகத்தால் எழுந்த அலைகள் சரத்காலத்தில் எழும் நீர் கொண்ட மேகங்களைப் போலக் காணப்பட்டது. அக்கடலில் இருந்த திமிங்கலங்கள் மீன்கள் யாவும் வெளியே தெரிந்தன. கடலில் வசிக்கும் சர்ப்பங்களோ ஆகாச மார்க்கமாக செல்லும் ஆஞ்சநேயரைக் கண்டு கருடன் என எண்ணி பயம் கொண்டன.

மஹாதேஜஸ்வியான மாருதி ஆகாசத்தில் பறப்பது ஒரு பெரிய மலை இறக்கைகள் கொண்டு பறப்பது போலத் தோன்றியது. மேகக்கூட்டங்களின் இடையே அவர் புகுந்து வெளிப்படும் சமயத்தில் சந்திரனைப் போல அவர் தோன்றினார். இப்படி அதிவேகமாக சமுத்திரத்தைத் தாண்டிச் செல்லும் மாருதியைக் கண்டு தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் யாவரும் பூமழை பெய்தார்கள். ராமகாரியத்திற்காகச் செல்லும் அந்த ராமதூதனை சூரியன் தன் கிரணங்களால் சிரமப்படுத்தவில்லை, வாயுபகவான் அஞ்சனை மைந்தன் மீது குளிர்ச்சியாக வீசி அவரது சிரமத்தைப் போக்கினார். இவ்வாறு அவர் செல்வதைக் கண்ட நாகர்கள், யக்ஷர்கள், திக்பாலகர்கள், விபுதர்கள், கருடர்கள் அவரைப் புகழ்ந்தார்கள்.

Sundara Kandam: 2

மாருதி ஆகாய மார்க்கமாக தன் பயணத்தைத் தொடங்குதல்.
Scroll to top