இஷ்வாகு குலத்தின் உத்தமரான ஸ்ரீராமருக்குக் கைங்கர்யமாய் சமுத்திரத்தைக் கடந்து கொண்டிருக்கும் வானர குல சிரேஷ்டரான அனுமனை கௌரவிக்க சமுத்திர ராஜன் யோசனை செய்தான். “அனுமனுக்குத் நான்இப்போது சகாயம் செய்யாது போனால் கற்றறிந்தவர்களின் நிந்தனைக்கு ஆளாக வேண்டு வரும். மேலும் இஷ்வாகு குல ஸகர மஹாராஜாவால் தோன்ற பெற்று வளர்க்கப்பட்ட நான், இஷ்வாகு வம்சத்தில் நலம்விரும்பியான அனுமன் எவ்வகையிலும் கஷ்டப்படுவதை பார்க்கச் சகியாதவன். எனவே அவருடைய களைப்பு நீங்க உதவி ஏதேனும் புரிய கடமைப்பட்டவனாகிறேன். இவ்வாறு ஒரு சகாயம் கிடைக்கப்பெற்றால் களைப்பு நீங்கி அவர் சுகமாக சமுத்திரத்தைக் கடப்பார்.”, என தன்னுள் எண்ணிக் கொண்டான்.
அதன் பின்னர் தன்னுள் மறைந்திருக்கும் மைனாகப் பர்வத சிரேஷ்டனைப் பார்த்து, “சிறந்த மலையோனே, பாதாளத்தில் வசிக்கும் அசுரகுலத்தைச் சார்ந்தோர்களுக்கு தடுப்பாய் நீ இந்திரதேவனால் இந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளாய். மேலே, கீழே மற்றும் குறுக்காகவோ சஞ்சாரம் செய்யும் ஆற்றல் பெற்றவன் நீ. இப்பொழுது ஒரு நற்காரியத்திற்காய் உன்னை நான் தூண்டுகிறேன். நீ மேலெழுந்து வானர சிரேஷ்டரான ஆஞ்சநேயர் இளைப்பாறி செல்ல வழிவகை செய்ய வேண்டும். வாயு புத்திரனான அனுமன் ராம காரியத்திற்காக ஆகாயத்தில் பறந்து சென்று கொண்டிருக்கிறார். இஷ்வாகு குலத்தில் வந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது எனது கடமை. உனக்கும் இஷ்வாகு குலத்தோர் இன்னும் அதிகமாகப் பூஜிக்கத் தக்கவர்கள். இந்த உபகாரத்தை நாம் செய்யத் தவறினால் நல்லவர்களின் சினத்திற்கு நாம் உள்ளாக வேண்டும். நமது கௌரவமிக்க விருந்தாளியான அனுமன் உன்மீது இளைப்பாறி செல்ல ஏதுவாக நீ மேலெழுந்து வருவாயாக” என சமுத்திர ராஜன் கேட்டுக் கொண்டான்.
சமுத்திர ராஜனின் வார்த்தைகளைக் கேட்ட மைனாகப் பர்வதம் கடல் நீரைக் கிழித்துக் கொண்டு மேலே எழும்பியது. பெரிய மரங்களும் செடிகளும் வளர்ந்திருந்த அம்மலை, தங்கமயமாக, சுடர் ஒளிகொண்ட சூரியனைப் போலப் பிரகாசித்தது. கின்னரரகள், பெரிய நாகர்கள் வசித்த அம்மலை பல கதிரவன்கள் ஒன்றாய் கூடி ஒளி வீசுவதைப் போல இருந்தது.
ஆகாயத்தின் பறந்து கொண்டிருந்த வானர சிரேஷ்டர் திடீரென தன்முன்னே தோன்றி நிற்கும் மலையைப் பார்த்து, இது தனக்கு ஏற்பட்ட ஒரு தடை என தீர்மானித்துக் கொண்டார். பெரும் வேகத்தில் வந்த அவர் அம்மலையைத் தன் மார்பினார் முட்டித் தள்ளினார். பெரும் சூறை காற்று மேகக்கூட்டங்களைச் சிதறடித்தது போன்றிருந்தது மாருதியின் செயல். மாருதியின் வேகத்தைக் கண்ட மைனாகப் பர்வத சிரேஷ்டன் மிகவும் பூரிப்புக் கொண்டு, மானுட உருவத்தில் அனுமனின் முன்னே தோன்றினான்.
“வானர சிரேஷ்டரே, செயற்கரிய செயலைப் புரிந்திருக்கிறாய். எனது சிகரங்கள் மீது தாம் இறங்கி இளைப்பாறி கொள்ள வேண்டும். ராமருடைய வம்சத்தால் சமுத்திர ராஜன் வளர்ச்சியைப் பெற்றான். அதற்கு நன்றி உரைக்கும் விதமாக ராம காரியத்தில் ஈடுபட்டிருக்கும் உன்னை ஸமுத்திர ராஜன் பூஜிக்கிறான். பிரதியுபகாரம் செய்ய விழைகிறான். அது மரபும், முறை பொருந்திய கடமையும் ஆகும். அதனை ஏற்று கொண்டு நீ அவனை கௌரவிக்க வேண்டும். உனக்கு மரியாதை செய்வதற்காகவே ஸாகரனால் (ஸமுத்திர ராஜன்) தூண்டப்பட்டிருக்கிறேன். மேலும் உனக்கு மரியாதை செய்ய எனக்கும் காரணம் இருக்கிறது. முற்காலங்களில் (கிருத யுகத்தில்) மலைகளுக்கு இறக்கைகள் உண்டு. அதன் மூலம் அவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பறந்து செல்லும் திறன் பெற்றிருந்தன. ஆனால் அம்மலைகள் தங்கள் மீது விழுந்துவிடுமோ என மஹரிஷிகள், தேவ கணங்கள், ஏனைய ஜீவராசிகள் அஞ்சி நடுங்கினர். அதனால் தேவேந்திரன் சினம் கொண்டு தன் வஜ்ராயுதத்தால் மலைகளின் இறக்கைகளை சிதைத்து விட்டான். என்னை அவன் துரத்தி வந்த போது, உன் தந்தை வாயு பகவான் எனை வெகு சீக்கிரமாக இந்தக் கடலில் தள்ளி காப்பாற்றினார். எனவே அவரது புத்திரரான உனக்கு நானும் கௌரவம் செய்யக் கடமைப் பட்டுள்ளேன். பற்பல கிழங்குகள், கனி வகைகள் எனது சிகரங்களில் உள்ளன. அவற்றை உண்டு களித்து, களைப்பாறி நீ செல்ல வேண்டும். உன்னைப் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நீயும் எங்களோ அம்மகிழ்ச்சியைப் பாராட்ட வேண்டும்.”, என்று மைனாகப் பர்வத சிரேஷ்டன் ஆஞ்சநேயரிடம் கூறினான்.