ஜாம்பவானால் தூண்டப்பட்ட ஆஞ்சநேயர் சாரணர்கள் சஞ்சரிக்கும் ஆகாய மார்க்கத்தில், ராவணனால் அபகரித்துச் செல்லப்பட்ட தேவி சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பினார். அவ்வாறு தேடிச் செல்லும் சமயத்தில் ஏற்படும் இடையூறுகள் யாவையும் களைய அவருக்குள்ள சாமர்த்தியம் யாருக்கும் இல்லை. பிறரால் செய்ய இயலாத அபூர்வ காரியத்தைச் செய்யவிருக்கும் அனுமான் ஆநிரைக் கூட்டத்தின் நடுவே இருக்கும் காளையைப் போல தேஜசுடன் விளங்கினார். மரங்களும், செடிகளும், பூக்களும் நிறைந்த மஹேந்திர பர்வதத்தின் (மலை) மேலே சுகமாக உலாவினார். அந்தப் பர்வதத்தின் மேலே இருக்கும் மரங்களைத் தன் மார்பினால் முறித்து அங்கிருந்த மிருகங்களை அடித்துத் தள்ளி, பக்ஷிகளை (பறவைகளை) பயம் கொள்ளச் செய்து சிங்கத்தைப் போல பிரகாசித்தார்.
அந்தப் பர்வதத்தில் நின்ற அனுமன், மடுவிலே விளையாடும் கஜத்தைப் (யானை) போலக் காணப்பட்டார். அவர் தன்னுடைய ஆச்சாரியரான சூரிய பகவானுக்கும், மஹேந்திரனுக்கும், தன் தந்தையான வாயுபகவானுக்கும், தனக்கு வரங்கள் அளித்த பிரம்மதேவருக்கும், பூதகணங்களுக்கும் நமஸ்காரம் செய்து புறப்பட யத்தனித்தார். அதன் பின்னர் தெற்கே திரும்பி நமஸ்கரித்து புறப்பட ஏதுவாக வளரத்துவங்கினார். கந்தர்வர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்க சமுத்திரத்தைப் போல தன் உருவத்தை வளர்க்கத்துவங்கினார் மாருதி. அளவற்றதாய் சரீரத்தை வளர்த்துக் கொண்ட ஆஞ்சநேயர், சமுத்திரத்தைத் தாண்ட, அம்மலையை தன்னுடைய கரங்களாலும் கால்களாலும் அழுத்தினார். இதனால் அந்தப் பர்வதம் ஒரு முகூர்த்தக் காலம் வரை கிடுகிடு என ஆட்டம் கண்டது. அந்தப் பர்வதத்தில் இருந்த மரம் செடிகளிலிருந்து பூக்கள் யாவும் உதிர்ந்து அந்த மலையில் விழுந்தன. அந்தப் பர்வதம் முழுவதுமே உதிர்ந்த அப்பூக்களால் மூடபட்டு மணமும் ஒளியும் வீசிற்று. உத்தமமான அந்த வானர சிரேஷ்டரால் அழுத்தப்பட்ட மஹேந்திர பர்வதமானது, மதம் கொண்ட யானை மதஜலத்தைப் பெருக விடுவது போல நீர் தாரைகளைப் பெருக்கியது. அந்த மலையில் இருந்த குகைகளில் வசித்து வந்த பிராணிகள யாவும் அதிலிருந்து வெளிப்பட்டு விசித்திரமாக ஓசை எழுப்பின. அந்த ஓசை நாலாபுறமும் பரவி ஒலித்தது. அம்மலையிலிருந்து வெளிப்பட்ட விஷப்பாம்புகள் அங்கிருந்த பாறைகளைக் கடிக்க, அப்பாறைகள் விஷ அக்னியால் ஜொலித்துத் துண்டுகளாய் சிதறிப் போயின. அம்மலையில் வசித்த தபஸ்விகள், இந்தப்பர்வதத்தை பூதங்கள் பிளக்கின்றன என எண்ணி அங்கிருந்துக் கிளம்பிப் போனார்கள்.
Sundara Kandam: 1
Featured image: Photo by Himesh Mehta from Pexels.