ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தேவகி வசுதேவருக்குப் புத்திரனாக அவதரித்தாலும் அவர் வளர்ந்ததோ யசோதையிடமும் நந்தகோபரிடமும் தானே! அந்த நந்தகோபரின் உறவினர் அக்ரூரர். கம்சனிடம் அரசவைப் பணியாளராக இருந்தார் அக்ரூரர். கண்ணன் மேலே மிகுந்த பக்தி கொண்டவர்.
கண்ணனைக் கொல்ல எண்ணம் கொண்டிருந்த கம்சன் ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி குவலயாபீடம் என்ற மத யானையையும், முஷ்டிக சானூரர் என்ற இரு மல்யுத்த வீரர்களையும் தயார் செய்தான். கண்ணனை அழைத்து யானையைக் கொண்டு கொன்றுவிடலாம் எனவும், ஒருவேளை யானையிடமிருந்து தப்பி விட்டால் மல்யுத்த வீரர்களைக் கொண்டு கொன்று விடலாம் என்பது அவன் திட்டம். கண்ணனை அழைத்து வர நம்பகமான ஒருவரை அவன் தேடியபோது அவனுக்கு அக்ரூரரைப் பற்றிய நினைவு வர, அக்ரூரரை அழைத்து கண்ணனைக் கூட்டி வரச் சொன்னான்.
ஸ்ரீகிருஷ்ணரின் மீது அளவற்ற அன்பும், ஆசையும் கொண்டிருந்த அக்ரூரர் அவனைக் காண வாய்ப்புக் கிட்டாது தவித்துக் கொண்டிருந்தார். தன் மன்னனுக்குத் தான் கிருஷ்ணரைப் பிடிக்காதே என்பதே காரணம். கம்சனின் ஆணையைக் கேட்ட அக்ரூரர் மிகுந்த ஆர்வமும், மகிழ்ச்சியோடும் தன் ரதத்தில் கண்ணனைக் காண வெகு அவசரமாய் துள்ளிக் குதித்துக் கிளம்பினார். கம்சனின் திட்டத்தை அவர் அறிந்திருந்த போதும், ஸ்ரீகிருஷ்ணரைக் கம்சனால் ஒன்றும் செய்து விட முடியாது என அவர் அறிந்திருந்தார்.
ஸ்ரீகிருஷ்ணரைக் கண்டு அவரையும் பலராமரையும் தன் ரதத்தில் அழைத்து வரும் வழியில், யமுனை ஆற்றை கண்டு அதில் நீராட இறங்கினார். எனினும் அவரது மனதில் பாலகர்களை ரதத்தில் தனியே விட்டுச் செல்கிறோமே என்ற பயமும் கவலையும் ஆக்கிரமித்தே இருந்தது. நதியில் அக்ரூரர் தன் தலையை மூழ்கிய போது ஆதிசேஷனாக அண்ணன் பலராமரும் எம்பெருமானாக ஆதிசேஷன் மேல் ஸ்ரீகிருஷ்ணரும் அக்ரூரருக்குக் காட்சி அளித்தனர். அக்ரூரரின் பக்தியும், எம்பெருமானின் கருணையும் அத்தனை மகத்துவமானது.
இப்படி “அக்ரூரரைப் போல ஸ்ரீகிருஷ்ணரின் மேல் அதீத பக்தி கொண்டு அவரை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டேனோ? இவ்வூரில் நான் இருப்பதற்கு…” எனப் பெண் பிள்ளை முதல் ரகசியத்தை ராமானுஜரிடம் கூறினாள்.