அப்பூச்சி காட்டுதல் என்பது குழந்தைகள் தங்கள் இமைகளை வெளியே எடுத்து பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பது போன்று பயமுறுத்தி விளையாடும் விளையாட்டு.
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாதுஅன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
எல்லோரும் மெச்சும் அளவிற்கு ஊதும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கினை இடக்கையில் வைத்திருப்பவன். நல்ல வேய்ங்குழலை (புல்லாங்குழல்) ஊதுபவன். பொய்யான சூது விளையாட்டில் தோற்று போன மிகுந்த பொறுமைசாலிகளான பாண்டுவின் புத்திரர்களுக்காக தூது போய் பத்து ஊர்களை அம்மன்னர்களுக்காய் கேட்டவன். பாரத யுத்தத்தை முன்னின்று நடத்தியவன். அந்தத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மா, அப்பூச்சி காட்டுகின்றான்.
கண்ணன் எம்பெருமான் பிறந்த சமயத்திலேயே நான்கு தோள்களோடு சங்கு சக்கரம் ஏந்திப் பிறந்தான். எனினும் அது கண்ட பயந்த தேவகி கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் இரு புஜங்களை மறைத்துக் கொண்டு சாதாரண குழந்தையாகவே தன்னைக் காட்டிக் கொண்டான்.
ரங்கநாதனுக்கு பறை கொட்டி, இசையமைத்துப் பாடும் அரையர் சுவாமி, இப்பாசுரத்தைப் பாடுகிறார். உடையவரான ராமானுஜரும் அரையர் சுவாமியின் அபிநயத்தைக் கண்டு கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் எம்பார், கூரத்தாழ்வான், முதலியாண்டார் ஆகியோரும் இதைக் கண்டு கொண்டிருந்தனர்.
முதல் முறை அப்பூச்சி காட்டுதலை அரையர் சுவாமி இமையை மடித்துக் காட்டி அபிநயம் செய்ய, எம்பார் அரையர் சுவாமியிடம், இரு புஜங்களில் சங்கு சக்கரத்தை ஏந்தி நாராயணன் நிற்பது போல ஜாடை காட்ட, அதை புரிந்து கொண்ட அரையர் அடுத்த முறையில் நான்கு தோள்களோடு சங்கு சக்கரம் ஏந்தியவனாக கண்ணன் பார்ப்போரை அப்பூச்சி காட்டி பயம் உண்டாக்கினான் என்று ஆடிப்பாடி முடித்தார்.
கம்சன் கண்டு கொண்டு விடக்கூடாது, ஆகவே மற்ற இரண்டு புஜங்களையும் மறைத்துக் கொள் என்ற தேவகியின் வேண்டுகோளுக்கிணங்க இரண்டு கைகளோடு மட்டும் வாழ்ந்து வந்தக் குழந்தைக் கண்ணனை 4 கரங்களைக் காட்டியே கண்ணன் பயமுறுத்தியிருக்கக் கூடும், அவன் தெய்வக் குழந்தை அல்லவா, என்பதே உடையவர் ராமானுஜரின் எண்ணம். ஒரு சமயம் ராமானுஜரும் எம்பாரும் இது குறித்து ஏற்கனவெ சம்வாதம் செய்திருந்தனர்.
அரையர் சட்டென்று இவ்வாறு மாற்றி பாடியதைக் கண்ட ராமானுஜர், “கூட்டத்தில் கோவிந்த பெருமாள் இருக்கிறீரோ?”, எனக் கேட்க, எம்பார் ராமானுஜர் முன் வந்து, “திருத்தம் சரிதானா ஸ்வாமி?”, என்று கேட்க, ராமானுஜரும் சிரித்தும் கொண்டே ஏற்று கொண்டார்.