இவ்வாறு அனுமன் ஆகாசத்தில் தெற்கு நோக்கிப் பறந்து கொண்டிருப்பது, வடதிசையிலிருந்து தென் திசை நோக்கி ஒரு வால் நக்ஷத்திரம் விழுந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திற்று. வால் நக்ஷத்திரம் தோன்றுவதென்பது அரசனுக்கு அபாயம் ஆகும். இவ்வாறு அனுமன் லங்கையை நோக்கித் தென் திசையில் சென்று கொண்டிப்பது லங்கையின் அரசனுக்கு ஆபத்து என்பதை உணர்த்துவதாய் இருந்தது. உயரே பறக்கும் அனுமனுடைய நிழல் கீழே அவருக்கேற்ப சமுத்திரத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பார்க்கையில் பாய்மரம் கொண்டு கட்டப்பட்ட ஒரு கப்பல் காற்றடித்து மிதந்து செல்வது போல இருந்தது. சில சமயங்களில் அவரால் ஏற்பட்ட காற்றின் வேகத்தால் சமுத்திரத்தில் பெரிய அலைகள் எழும்பி அனுமனின் மார்பில் வந்து மோதிச்சென்றன.
சமுத்திரத்தில் அலைகள் மேருமலை போன்றும் மந்தர பர்வதம் போன்றும் பிரம்மாண்டமாகப் பொங்கி எழுந்தன. சமுத்திரத்தில் அனுமனின் நிழலானது பத்து யோஜனை அகலமும் முப்பது யோஜனை நீளமும் கொண்டு மிக அழகாக இருந்தது. எவ்வித ஆயசமும் இல்லாமல் ஆகாசத்தில் சமுத்திரத்தைக் கடக்கும் அனுமனைப் பார்த்துத் தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் கானம் இசைத்தார்கள். மேலும் நாகர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், முனிவர்கள், பக்ஷிகள் யாவரும் அனுமனைப் புகழ்ந்தார்கள்.
Sundara Kandam: 3